யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் எதிலிருந்தெல்லாம் விலகியிருக்கிறோமோ அவற்றாலெல்லாம் நாம் துன்பப் படுவதில்லை. எவ்வளவோ நாளுக்கு முன் கேள்விப்பட்ட குறள். இருமை என்பது நாம் பார்க்கும், கேட்கும், உணரும், எண்ணும் அனைத்தின் இயல்பு என்பதை அறியாத நாளில் "சாமியாராய்ப் போய் விட்டால் துன்பப்பட மாட்டாய்" என்று இந்தக் குறள் சொல்வதாக நினைத்துக் கொண்டேன். இப்போது இந்தக் குறளை நினைக்கும்போதெல்லாம் மனதில் தோன்றுவது இந்தக்குறள் ஒருபாதி உண்மையை மட்டுமே சொல்கிறது என்பது தான். எவற்றிலிருந்து நாம் நீங்கியிருக்கிறோமோ, அவற்றின் மூலம் நாம் துன்பப்படுவதில்லை என்பது என்னவோ உண்மைதான். ஆனால் அவற்றின் மூலம் கிடைக்கும் இன்பமும் நமக்குக் கிடைக்காது என்பதையும் நாம் மறக்கக் கூடாது அல்லவா? ஒரு இலக்கியத்தின் ஆசிரியரின் கருத்தை நாம் தவறென நினைக்கும்போது, அதை இரண்டு விதமாகப் பார்க்கலாம். "வள்ளுவர் இந்தக் குறளில் அவருக்குத் தெரிந்த அறுதி உண்மையைச் சொல்லி விட்டார், அவரை விட எனக்கு அதிகம் தெரியும்" என்று நான் நினைக்கலாம். மாறாக, வள்ளுவர் வேண்டுமென்றே பாதி உண்மையை எழுதி வைத்தா