ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிறை 'கூட'வா??

பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு
இந்த இரண்டு வரிகளும் பல வருடங்களுக்கு முன் முதன்முதலில் கேட்டதிலிருந்து இன்று வரையிலும் கேட்கும்போதெல்லாம் உறுத்திக் கொண்டே இருக்கின்றன.  என்னத்தை நினைத்து வைரமுத்து இந்த வரிகளை எழுதினாரோ.  பிறையும் இருளும் எல்லா நேரத்திலுமே அழகுதானே.

வியாழன், 22 செப்டம்பர், 2011

யாமறிந்த மொழிகளிலே

பல தமிழர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன் -- "தமிழ் என்பதே ஒரு அருமையான அனுபவம்".  சிறு வயதுகளில் அதற்கெல்லாம் நான் மதிப்பே கொடுத்ததில்லை.  என் ரத்தத்தின் ரத்தமே என்று மேடையில் முழங்கும் அரசியலுக்கும் "தமிழே அமுதே"வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை.  தமிழ் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் காலத்தில் ஒப்பு நோக்க வேறெந்த மொழியும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

இப்போது நிலைமை வேறு.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறேன்.  ஆங்கிலப் பாடல்கள் கூட புரியத் தொடங்கி விட்டது.  ஆங்கிலத்தில் வாசிப்பதும் எழுதுவதும் தமிழை விடப் பலமடங்கு அதிகம்.  இந்த நிலையில் என்னால் ஆங்கிலமும் தமிழும் எனக்கு அளிக்கும் அந்தரங்க அனுபவத்தைப் பற்றி ஓரளவு பேச முடியும்.

ஜெயமோகனின் புல்வெளி தேசம் புத்தகத்தை நேற்று படித்து முடித்து, நேற்றிரவே கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.  தமிழ் வாசிக்கும் போது தோன்றும் அந்த எண்ணம் மீண்டும் இன்று காலையில் தோன்றியது: தமிழ் அந்தரங்கமாக என் மனதில் ஒரு இனிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அது ஒரு அழகியல் அனுபவம்.  அதற்கு என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஒன்றும் பிடிபடவில்லை.

சிறிது நேரத்துக்குப் பின் தற்செயலாகக் காதில் விழுந்த பாடல் வரியில் ஒரு பதில் இருந்தது.  "பாசி மணி ரெண்டும் கோக்கையிலே பாவி மனசையும் கோத்தவளே."  தமிழில் இது மாதிரியான வரிகள் ஏகப்பட்டவை.  ஆங்கிலப் பாடல்களோடு ஒப்பிட்டால் நம் ஆள்கள் பல மடங்கு அதிகமாக உவமையையும் உருவகத்தையும் படிமங்களையும் பயன்படுத்தியிருப்பார்கள்.  ஜெயமோகன் புல்வெளி தேசத்தில் கூறியிருந்த ஒரு கருத்து "இலக்கியம் என்பது பண்பாட்டைச் சேகரிக்கும் கருவி" என்பது.  தமிழ் இலக்கியத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு இருக்கிறது.  அந்தப் பின்புலம் தான் இன்றைக்கு நாம் எழுதும் சினிமாப் பாடல்களில் கூட உருவகங்களை நம்மை எதிர்பார்க்க வைக்கிறதோ என்னவோ.

-----
ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் கவிஞர்களில் ஒருவர் லியனர்ட் கோஹன்.  இந்தக் கவிதையைக் கேட்டால் உங்களுக்குப் புரியும், ஏன் என்று.
கோஹன் ஒரு இசையமைப்பாளரும் கூட.  பல நல்ல பாடல்களும் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

சனி, 3 செப்டம்பர், 2011

வேதம் புதிது

திடீர் திடீரென்று எனக்குத் தோன்றும், ஏற்கெனவே பார்த்த ஏதாவதொரு படத்தைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்று.  பல வருடங்களுக்கு முன் பார்த்த படம் வேதம் புதிது.  இன்றைக்கு மீண்டும் பார்க்கத் தோன்றியது.

முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பாரதிராஜா மேல் எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.  பிறகு இந்தப் படத்தை முழுவதுமாக மறந்து போய் விட்டேன்.  இன்று ஒவ்வொரு காட்சியையும் பார்க்கப் பார்க்க அதிலிருந்த நேர்த்தியும் அழகும் மீண்டும் ஒரு புதிய அனுபவமாயிருந்தது.

வழக்கமான தமிழ்ப்படங்களைப்போல வளவளவென்றில்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லி வேகமாக நகர்ந்த வண்ணமிருக்கிறது படம்.  இயல்பான பாத்திரங்களின் இயல்பாகவும் 'நச்'சென்றும் இருக்கும் வசனங்களை ரொம்ப ரசித்தேன்.  முக்கியமாக வீட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் பிராமணப் பையனால் பாலுத்தேவரின் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள்.
- நீங்க கோழியெல்லாம் சாப்பிடுவேளா?
- ஆங், ஆடு கோழி எல்லாத்தையும் திங்கிறது தான்.
- மாமி?
- அவ மட்டும் என்ன வாயைப் பாத்துட்டா இருப்பா, அவளும் திங்கிறதுதான்.
- இதெல்லாம் பாவம் இல்லையா?
- (தனக்குள்) சின்னப் பசங்களைக் கெடுத்துட்டாங்க.
----------
- இதென்ன புதுசா இந்த வீட்டுக்குள்ள மணிச்சத்தம் கேக்குது?
- முன் செஞ்ச வினை, பின் செஞ்ச வினைன்னு சொல்லுவாங்க.  சாமி விடுமா?  நீங்க கோயிலுக்கே போக மாட்டேன்னு வீம்பு பண்ணுவீக.  சாமி கண்ணு திறந்துச்சு, கோயிலு வீட்டுக்குள்ள வந்துருச்சு.
(சற்று நேர மௌனம்)
- சாம்பிராணிப் புகையை இவ்வளவு போட்டு வச்சிருக்கியே, உனக்கு எதாவது பிடிச்சிருக்கா இல்லை வீட்டுக்கு எதாவது பிடிச்சிருக்கா?
- ஆமா... அந்தப் புள்ளையை எங்க இருந்து புடிச்சுட்டு வந்தீக?
- அக்ரகாரத்துல புள்ளை அநாதையா நின்னுச்சு... கூட்டியாந்துட்டேன்.
- அப்ப அந்த வாடைதான் வீசும்.  நம்ம புள்ள சங்கரபாண்டி இருந்து அவன் கைகாலை நீங்க முடக்கிப் போடாம இருந்திருந்தா, இந்தக் கூடத்திலயும் அந்த வாடைதான் வீசும்.
இந்தப் படத்தில் நான் முக்கியமாகப் பார்ப்பது பாலுத்தேவர் எவ்வளவு தூரம் மாற்றங்களுக்குச் சம்மதிக்கிறார் என்பது தான்.  பிடிவாதமான கொள்கைக் காரராக இல்லாமல் காலத்தின் போக்குக்கேற்றாற்போல் மாறும் மனிதர் மேல் எனக்கு எப்போதும் மதிப்புண்டு.

பாலுத்தேவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே என் அப்பாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.  முக்கியமாக பாலுத்தேவருக்கும் அப்பாவுக்கும் இருக்கும் ஒற்றுமை.

படித்துக் கொண்டிருந்த நாள்களில் என் நண்பர்களுக்கு என் அப்பாவின் மேல் பெரிய மதிப்புண்டு.  "கண்ணா நீ வெளியே போறியா இன்னைக்கு?  நீ வெளியே போகலைன்னா நான் வண்டி எடுத்துக்குவேன்" என்று என் அப்பா என்னிடம் சொல்வதைக் கேட்டு ஆச்சர்யப் படாதவர்கள் கம்மி.  பொதுவாக அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் இந்த மாதிரி சின்ன விஷயங்களைப் பேசுவது இல்லாமல் இருக்கலாம்.  அல்லது மகன் வெளியே போவது உதவாத விஷயங்களுக்கு மட்டும்தான் என்று பலர் முன்முடிவுடன் இருப்பார்களோ என்னவோ.

என் அண்ணன் சரவணனுக்கு அப்புறம் நான் தீவிரமான விஷயங்கள் பேசுவது என் அப்பாவிடம் தான்.  குழந்தையாய் இருந்த காலத்திலிருந்து எத்தனையோ விஷயங்களை அப்பாவுடன் விவாதித்திருக்கிறேன்.  அது சாத்தியப்பட்டது அப்பா எட்டு வயது பத்து வயது சிறுவனாக நான் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து கவனித்ததால் தான்.

கல்லூரியில் ஒருநாள் வகுப்பிலுள்ள பையன்கள் அனைவரும் தம் பெற்றோருடன் வந்தால் மட்டுமே வகுப்பில் சேர்த்துக் கொள்வோம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிவிட்டது.  தயங்கித் தயங்கித் தான் வீட்டில் சொன்னேன்.  என்ன விஷயம் என்று கேட்டார்கள்... சொன்னேன்.  ரொம்பச் சில்லறையான விஷயமாக இருந்திருக்க வேண்டும், எனக்கு இப்போது சுத்தமாக ஞாபகம் இல்லை.  மற்ற பையன்கள் வீட்டில் திட்டு வாங்கினார்கள்.  பெற்றோருக்குக் கல்லூரி நிர்வாகம் விளைவித்த அசௌகரியத்துக்குப் பையன்கள் பழியேற்றார்கள்.  அந்த நாளிலோ அதற்குப் பின் வந்த நாள்களிலோ ஒரு கணம் கூட என் அப்பா அந்த நாள் குறித்து என்மேல் கோபம் கொள்ளவில்லை.

நான் படித்தேன் நான் உழைத்தேன் என்று இப்போது காரணம் சொல்லிக் கொள்ளலாம்.  உண்மையில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னை மதிக்கிறார்களென்றால், அது என் வீட்டில் எல்லோரும் என்னை மதித்ததால்தான்.  நான் சொன்ன வார்த்தைமேல் வீட்டில் எல்லோரும் நம்பிக்கை வைத்ததால் தான்.  இதற்கெல்லாம் கைமாறு என்று எதையுமே செய்ய முடியாது.  "பிள்ளைப் பெத்த நோவை எந்தப் பிள்ளை தீர்த்ததுண்டு" என்ற வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

வியாழன், 1 செப்டம்பர், 2011