இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கஞ்சத்தனம்

சிறு வயதிலிருந்தே என்னை வீட்டில் கஞ்சன் என்று அழைப்பதுண்டு. பணத்தைச் செலவழிக்க எனக்கு மனமே வராது. கிடைப்பது அனைத்தையும் சேர்த்து வைக்கவே விரும்புவேன். ஆளில்லாத அறையில் அரை நிமிடம்கூட விளக்கு எரியவோ காற்றாடி ஓடவோ விடமாட்டேன். ஓடிப்போய் அணைத்து விடுவேன். "போய்த் தண்ணி குடிச்சிட்டு வர்றதுக்குள்ள யாரு லைட்டை ஆஃப் பண்ணா? கண்ணாப் பயலாத்தான் இருக்கும்" என்பது வீட்டில் சாதாரணமாகக் கேட்க முடிந்த வசனம். ஆனாலும் நான் நிறைய செலவழித்தேன். என்னிடம் இருக்கும் பொருள்களெல்லாமே விலை உயர்ந்தவை. வீட்டில் எல்லோரும் 300, 400 ரூபாய்க்குச் சட்டை வாங்கும்போது 1500 ரூபாய்க்குச் சட்டை வாங்கினேன். 6 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்க வசதியிருந்தபோது 11.5 லட்ச ரூபாய்க்குக் கார் வாங்கினேன். 17000 ரூபாய் கணினியை மாற்ற 1300 டாலர் (கிட்டத்தட்ட 72000 ரூபாய்) விலையுள்ள கணினி வாங்கினேன். ஆனாலும் 800 டாலர் செலவழித்து ஒரு தொலைபேசி வாங்க மனம் வர மாட்டேன் என்கிறது. சில நேரங்களில் 150 டாலர் செலவழித்து காலணி வாங்கவும்கூட மனம் வர மாட்டேன் என்கிறது. உண்மையில் நான் கஞ்சனா இல்லை செலவாளியா... இன்றுவரை புரியவில்லை.