இடுகைகள்

டிசம்பர், 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேற்று சாதிக்காரன்

புதியவனின் ஒவ்வொரு அசைவிலும் அவன் வேற்று சாதிக்காரன் என்பது தெரிந்தது. நாலைந்து இரவுகள் கழிந்தபின் கேட்டேன் ஏன் வினோதமாய் நடந்துகொள்கிறான் என்று. "உங்களைப் போல இருக்க முயல்கிறேன்" என்றான்.

மனம்

காய்ந்த எலும்பைக் கடிக்கும் நாய் ஒருகணமும் அவ்வெலும்பை விட்டகலாமல் தன் உயிர்போல் காப்பதைப் பார்த்திருக்கிறாயா? எலும்பைத் தின்ன முடியாதென்பது அந்த நாய் அறியாததா என்ன! அத்தனை நாடகமும் அடுத்தொரு கறித்துண்டு கிடைக்கும் வரை தான்.

இருமை

கணந்தோறும் நதி கரையையும் கரை நதியையும் மறு நிர்ணயம் செய்தவாறே உள்ளன. வற்றி மெலிந்து ஓடும் நதி கரையைத் தன்பால் இழுத்து இறுக்குகிறதா, இல்லை கரை நதியை அழுத்தி நெருக்கி ஒடுக்குகிறதா? காய்ந்து காணாமலாகும் நதி கரையையும் அழித்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறதா, இல்லை பெருகிக்கொண்டே போகும் கரை நதியை அழிப்பதால் தானும் அழிகிறதா? கரையில்லாத நதியொன்றிருப்பின் அதை நாம் நதியென்றுதான் அழைப்போமா?