திங்கள், 14 ஜனவரி, 2013

மருத்துவம்

கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது.  சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது.  மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும்.  பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது.  காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும்.

முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது.  மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது.  பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.  அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது.  ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை.

சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது.  ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக் காரணமாக இருக்கலாமோ என்று.  என் தோலில் சிலபகுதிகளால் ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது.  சில சோப்புகள் தோலில் மிக ஆழமாகச் சுத்தம் செய்து தோலில் இருக்கும் எண்ணெய்ப்பசையை முழுதும் நீக்கிவிடும்.  நான் வீட்டில் உபயோகித்த சோப்பும் அப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இப்போது சிலநாள்களாக மனைவியின் shower gel-ஐ உபயோகித்து வருகிறேன்.  காயமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மட்டுப்பட்டுவிட்டது.
==========


முன்காலத்தில் பாரம்பரிய இந்திய மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் நோயாளிகளின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்களாம்.

என் சொந்த அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட ஒன்று, மனித உடல் என்பது ஒரு நீரோட்டம் போல ஓடிக்கொண்டே இருப்பது.  அதனை அறிந்துகொள்வதற்கும் வைத்தியம் செய்வதற்கும் அதன் ஓட்டம் பற்றிய அறிதல் கொஞ்சம் இருக்க வேண்டும்.

ஒரே நதி மலையில் ஓடும்போது ஓரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும், தரையில் ஓடும்போது மற்றொரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும் ஓடுகிறது.  அந்த நதியை ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் ஆராய்ந்தால் அந்நதியின் குணநலன் நமக்கு முழுதும் தெரியாதுபோக வாய்ப்புள்ளது.

அதேபோலத்தான் மனித உடலும்.  இந்தக்காலத்து மருத்துவர்கள் பலரும் தங்களது நோயாளியைப் பற்றிய ஒரு பரந்த புரிதலுடன் வைத்தியம் செய்வதில்லை.  நோயாளி மருத்துவரிடம் செல்லும் அந்த நிமிடத்தில் உடல் இருக்கும் நிலையைப் பொறுத்து மட்டுமே மருத்துவம் செய்யப்படுகிறது.

என் தாத்தா முன்பு சொல்வார் “டாக்டர்களுக்கு என்ன தெரியும்?  கேட்டா எனக்கு சுகர் இருக்கும்பான்.  நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று.  சின்ன வயதில் அவர் அப்படி ஏன் சொன்னார் என்று புரியவில்லை.  அவர்தான் விவரமில்லாமல் பேசுகிறார் என்றுதான் நினைக்கத்தோன்றியது.  ஆனால் உண்மையில் அவருக்கிருந்த உபாதைகளை மருத்துவர் எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் இப்போது நினைக்கிறேன்.  அவரைப்போலவே நானும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதைத் தவிர்த்து, கூடுமானவரை நானே என் ஆரோக்கியத்துக்குத் தேவையானதைக் கவனித்துக்கொள்கிறேன்.