திங்கள், 23 டிசம்பர், 2013

காரணங்கள்

பசி வரும்போதும் தூக்கம் வரும்போதும் அதற்கான காரணத்தை ஆராயாமல் பசியையும் தூக்கத்தையும் ஏற்றுக்கொள்ளும் நாம் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் மட்டும் காரணம் இல்லாமல் ஏன் ஏற்பதில்லை? காரணங்களேதும் இன்றி மனநிலையை ஏற்றுக்கொள்ளவும், பிறகு காரணங்களை நாடாமல் நேரடியாக மகிழ்ச்சியை நாடவும் பழகிக்கொண்டிருப்பதால் முன்பைவிடவும் இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

திங்கள், 21 அக்டோபர், 2013

Wedding, marriage — என்ன வித்தியாசம்?

“வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு marriage. கண்டிப்பா வந்திருங்க” என்று திருமண அழைப்பிதழ் கொடுப்பது நம் ஊரில் சாதாரணம். ஆனால் marriage என்ற வார்த்தையை இவ்வாறு உபயோகிப்பது தவறு என்பது உங்களுக்குத் தெரியுமா?

திருமண உறவு அல்லது சம்சாரம் என்பது கல்யாணம் ஆன நாளில் இருந்து வாழ்வு முடியும் வரை நீடிப்பது. அதுதான் marriage. அத்திருமண உறவு ஆரம்பிக்கும் விழா, கணவனும் மனைவியும் சேர்ந்து வாழத் தொடங்கும் அந்த விழா — அது wedding. ஆகவே wedding invitation என்பது சரி; marriage invitation என்பது தவறு. “வர்ற 23-ம் தேதி அண்ணனுக்கு wedding. கண்டிப்பா வந்திருங்க” என்று உறவினரை அழைப்பதே சரியானது.

திங்கள், 14 அக்டோபர், 2013

வீடு திரும்புதல்

12 வருடங்களாகிறது, நான் வீட்டைவிட்டுத் தனியாகத் தங்கியிருக்க ஆரம்பித்து.

முன்பெல்லாம் வாழ்க்கையில் என்னென்னவோ செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்றும் ஆசையிருக்கும். பயணம் செய்ய வேண்டும் என்பது ஒரு தீராத ஆசை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முடிந்த இடங்களுக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறேன். ஆனாலும் அண்டார்டிகா செல்வது, கப்பலில் நீண்ட பயணம் செய்வது, உலகிலேயே நீளமான சாலை முழுவதையும் பயணித்துக் கடப்பது போன்று பல நிறைவேறாத ஆசைகள் எப்போதும் இருந்து வருகின்றன. எவ்வளவுதான் முயற்சித்தாலும் இப்படி நிறைவேறாத சில ஆசைகள் இருக்கும் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் புரிகிறது. நிறைவேறாத ஆசைகள் பல இருந்தாலும் மனநிறைவுடன் வாழ முடியும் என்பதும் தெளிவாகிறது.

வீட்டிலுள்ளவர்களோடு ஒரு நீண்ட சாலைப்பயணம் (roadtrip) செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. சென்ற மாதம் குடும்பத்துடன் ராஜஸ்தான் சென்றோம். நல்ல பயணம். பல நாள் கழித்து இந்திய சாலைகளில் பயணம் செய்ததும், பல நாள் கழித்து அம்மா, அப்பா, அண்ணன்கள், பெரியம்மா, குழந்தைகள் எல்லோரையும் பார்த்ததும் மகிழ்ச்சியளித்தது. என்னைப் பொறுத்தவரை இந்த மாதிரிப் பயணங்கள் முக்கியம். என் வாழ்க்கையில் எவை முக்கியம் எவை முக்கியமல்ல என்று நான் வரையறுத்துக்கொள்ள இவை எப்போதும் உதவியாய் இருந்து வருகின்றன.

யோசித்துப் பார்க்கையில் இப்போதைக்கு என் வாழ்க்கையில் நான் ஆர்வமாக எதிர்பார்ப்பது என்னுடைய ஓய்வுக் காலத்தை. கோவில்பட்டிக்குப் போய் அண்ணன்களுடன் ஒரே வீட்டில் மீண்டும் வாழும் காலத்தை. அப்போது வீட்டிலுள்ள பெண் குழந்தைகளெல்லாம் கல்யாணமாகி அவரவர் புகுந்த வீட்டிலிருப்பார்கள். பிள்ளை இல்லாத வீட்டில் கிழவர்கள் நாங்கள் துள்ளிக்குதிக்கும் அந்தக் காலம்... நன்றாக இருக்கும். 25-லிருந்து 30 வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். படிக்க ஆசைப்பட்டு ஆனால் படிக்க முடியாமல் போன புத்தகங்களைப் படித்துக் கொண்டும், நினைத்தவுடன் காரை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டும்... நன்றாகத்தான் இருக்கும். இன்னும் கொஞ்சநாள் தான்.

புதன், 2 அக்டோபர், 2013

மன்னிப்புக் கோரல்

நான் பெரும்பாலான நேரங்களில் மன்னிப்புக் கேட்பதேயில்லை. ஏனென்றால் மன்னிப்புக் கேட்பது என்பது பெரும்பாலான நேரங்களில் பிரச்சனையைப் பூசி மெழுகவே பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்துக்குச் சொல்கிறேன். எனக்கு நெருக்கமான ஒருவர் மன்னிப்புக் கேட்பது எப்போதுமே ஒரே மாதிரிதான்: “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்.” கொஞ்சம் யோசித்தாலே இந்த வாக்கியத்தின் அர்த்தமின்மை விளங்கும்.

ஏதோ ஒன்று நடந்திருக்கிறது. அதில் இரண்டு பேருக்கிடையில் கருத்து வேறுபாடு. அந்த வேறுபாட்டைச் சரி செய்ய நினைப்பவர் “நான் செய்ததில் ஏதும் தவறிருந்தால் மன்னிக்கவும்” என்று சொல்லிவிட்டு, பிரச்சனையே தீர்ந்துவிட்டதாய் நினைத்துக்கொள்கிறார். இதனால் பிரச்சனைகள் அப்போதைக்கு மறக்கப்படுகின்றனவே தவிர அவை தீர்க்கப்படுவதில்லை. உண்மையில் பிரச்சனையைத் தீர்க்க விரும்பும் ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

அந்தக் கருத்து வேறுபாடு என்ன என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதில் தனது வாதம் தவறானதே என்று தோன்றினால் அத்துடன் தன்னுடைய கருத்தை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும். மன்னிப்புக் கேட்பதைவிடவும் இது முக்கியமானது ஏனென்றால் இந்த மன மாற்றம்தான் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் வராமல் தவிர்க்கும். இந்த நேரத்தில் கேட்கும் மன்னிப்பு நேர்மையானது: தனது வாதம் தவறானது என்று உணர்ந்தபின் அந்த வாதத்தை முன்வைத்ததற்காகக் கோரும் மன்னிப்பு அது.

சரி, யோசித்துப் பார்க்கையில் தனது வாதம் சரியானதே என்று தோன்றினால்? இப்போது மன்னிப்புக் கேட்டால் அத்துடன் தனக்குத் தானே ஒரு சத்தியமும் செய்துகொள்ள வேண்டும், இனிமேல் இதே போன்ற வாதத்தில் இதே நபருடன் ஈடுபடுவதில்லை என்று. இப்போது கேட்கும் மன்னிப்பு உறவைச் சரி செய்துகொள்ள; தனக்குள் எடுத்துக்கொள்ளும் சபதம் வருங்காலத்தில் இதே பிரச்சனை மீண்டும் வராமல் இருக்க. ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்து, மீண்டும் மீண்டும் அதற்கே மன்னிப்பும் கோருவது சம்பந்தப்பட்டவருடனான நமது உறவையும் பாதிக்கும்; நம்முடைய சுயமரியாதைக்கும் பங்கமாகும்.

அடுத்த முறை எதற்காகவேனும் மன்னிப்புக் கேட்குமுன் இதுபற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

ஞாயிறு, 2 ஜூன், 2013

ஈஸ்வர அல்லா தேரே நாம்

ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். மத நல்லிணக்கத்தை மையக்கருவாகக் கொண்ட நாவல் என்றாலும் காந்தியம், காதல், சமூகம் என்று பலவற்றையும் விவாதிக்கும் நாவல். நாவலில் எனக்குப் பிடித்த வரிகள்:
 • மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே!
 • உயர்நோக்கமுள்ள கல்வியும் ஞானமும் எளிமையான வாழ்வோடு இணைகிறபோது, எத்தகைய இழிநிலையிலிருந்த கடையனும் அந்தணனே ஆகிவிட மாட்டானோ?
 • அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்! மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை.
 • மனிதர் இல்லாத எந்தப் புனித இடமும் பாழ் அடைந்து விடுவதுதான் இயல்பு.
 • நான் படிச்சவரைக்கும் பைபிள், குரான், ஜென்டவெஸ்தா எல்லாமே வேறு வேறு மத நூல்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாபெரும் புத்தகத்தின் பல அத்தியாயங்களைத் தனித்தனியே படிக்கிறதாகவே உணர்ந்தேன். அப்படி உணர்கிறவனை காந்தி மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லலாம்.
 • கொள்கைகளாலும் மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல்கிறார்கள். இல்லை... இல்லை. அது குல்லாய்களாலும் குடுமிகளாலும் சில குறிப்பிட்ட அன்னியச் சொற்களைக் கலந்து தாய்மொழியில் பேசுவதாலும் வேறு பல புறத்தோற்றங்களினாலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறதோ.
 • மதத்தை ஏற்றுக்கொள்ளலாம்; விட்டுவிடலாம். அதைச் சீர்திருத்த நமக்கு என்ன உரிமை இருக்கிறது.
 • மதம்னு சொல்லுங்கோ, மார்க்கம்னு சொல்லுங்கோ, என்ன வேண்டும்னாலும் சொல்லுங்கோ... பெத்தவங்க பிள்ளைங்களுக்கு வாழறதுக்கு வேண்டிய நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுக்கறாகளே, அதுக்குப் பேர்தான் மதம்.
 • காலம் காலமாய் இந்தக் காதல் என்கிற பெண்களைப் பிடித்த ‘பீடை’ விவகாரம் இப்படித்தான் தொடர்கிறது. பார்த்தார்கள், சிரித்தார்கள், ஒருவரைப்பற்றி ஒருவர் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு கதைகளுக்கும் வதந்திகளுக்கும் இலக்கானார்கள் என்பது தவிர, வேறு ஆழ்ந்த காரணம் ஏதும் இந்தக் காதலுக்கு இல்லை.
 • பாடுபடறவக என்னைக்கும் பாடுபடத்தான் வேணும். பலனை அனுபவிக்கிறவக என்னைக்கும் பலனைத்தான் அனுபவிப்பாக போலிருக்கு.
 • அஞ்சி அஞ்சி அனுபவிக்கிற இன்பம் மிக விரைவில் நைந்து போய்விடும்.
 • பொதுவாக மாலைநேரம் என்பது மனிதர்களுக்குக் குதூகலம் தருவதாகவும், கொண்டாடத் தக்கதாகவும் அமைகிறது. இந்தச் சமூக உணர்வே இல்லாமல் தனிமைப்பட்ட காதலர்கள்தான் இந்த நேரத்தை ஒன்று திருட்டுத்தனமானதாக, அல்லது சோகமயமானதாக ஆக்கிக்கொண்டு விடுகிறார்கள்.
 • அதனால்தான் சொன்னேன், ‘காதல்தான் உண்டு. அதில் தோல்வி என்பதே இல்லை’ என்று. ஆனால் எப்போது [காதலுக்குத்] தோல்வி இல்லை? அந்தக் காதலர்கள் பிரிந்திருந்தாலும் சேர்ந்திருந்தாலும் பெரிய லட்சியங்களோடு தம்மை இணைத்துக்கொண்டிருந்தால் ஒருபோதும் அவர்களுக்குத் தோல்வி இல்லை. பிரிந்த அக்காதலர்களை அந்த லட்சியங்களே சேர்த்து வைத்துவிடும்.
 • மிகவும் அவசியமாகவும் அர்த்தமுடையதாகவும் வாழ்க்கையில் சம்பந்தப்பட்டுக் காதலை உணர்பவர்களே லட்சியம் என்ற ஒன்றை எதன் பொருட்டும் கைவிடாமல் மணவாழ்க்கையை மேற்கொள்கிறார்கள். எனவே அப்படிப்பட்டவர்களின் காதல் அவர்களை ஒரு நோய்போல வருத்துவதே இல்லை. லட்சியமில்லாத மனிதர்களுக்கு ஏற்படுகிற ஏற்படுகிற காதலே நோய். ஒரு சமூகம் அதை நோயாகவே பாதிக்கும்; அவர்கள் காதலும் அப்படியே நாளடைவில் ஒரு நோயே ஆகிவிடும்.
 • ஒரு குடும்பத்தில் இல்லாமையும் வறுமையும் இருப்பதுகூடக் கொடுமையல்ல; அது காரணமாக அவர்கள் அன்பற்றவர்களாகவும் பண்பற்றவர்களாகவும் ஆகிவிடுகிறார்களே, [அதுவே கொடுமை].
 • காலமும் நேரமும் கைகூடி வருகிறபோதுதான் ஒருவர் எடுத்த காரியம் யாவினும் வெற்றியாகிறது.
 • எந்த ஜாதியிலும் ஏழைகளுக்குத்தான் கஷ்டம்.

சனி, 11 மே, 2013

பூரண கும்பம்

“பெரியவர்கள் எழுந்தருளும்போது பூர்ணகும்பம் வைக்க வேண்டும்” என்று ஒரு சாஸ்திர விதி இருப்பதாக சடகோபன் ராமானுஜன் தன்னுடைய படமொன்றில் எழுதியிருக்கிறார். இதில் “பெரியவர்கள்” என்பவர்கள் பெரும்பாலும் இந்த மக்களின் வாழ்க்கை நலத்தை உயர்த்த ஏதேனும் செய்ய வல்லவர்களாக இருப்பார்கள்.

வளம் மிகுந்த ஓர் ஊருக்குப் பெரியவர் ஒருவர் வந்தால் கும்பத்தில் என்ன காண்பார்? நெய், பால் போன்ற விலையுயர்ந்த, வளத்தை வெளிக்காட்டும் திரவங்கள் கும்பங்களில் இருக்கும். அதே பெரியவர் வளம் குறைந்த ஒரு ஊருக்குப் போனால்? பெரும்பாலான கும்பங்களில் தண்ணீர் இருக்கும். தெரு வழியே செல்கையிலேயே மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இது ஒரு வழி. மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று அவர்களிடம் கேட்டு அறிவதைக் காட்டிலும் எளிமையான சிறந்த வழி.

வியாழன், 4 ஏப்ரல், 2013

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை.  அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது.  கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது.  தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது.  அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று.

ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ?  எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன்.  என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன்.  இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது.  என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான் இன்னும் நீராகவே இருந்து என்னுள் வாழும் உயிர்களைக் காக்கின்றேன்.  நியாயமா என்று என்னைக் கேட்காதே, குளிர்ந்து வீசும் இந்தக் காற்றைக் கேள்.”

காற்றைக் கேட்பது கஷ்டமில்லை.  காற்றுதான் எல்லா இடத்திலுமே இருக்கிறதே.  அதே இடத்தில் நின்றவாறே யானை காற்றிடம் அது திடீரென இப்படிக் குளிர்ந்துபோனது நியாயமா என்று கேட்டது.  காற்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல ஆரம்பித்தது.  “ஒரு சிறிய இடத்தில் இருந்து வாழும் உங்களுக்கு என் நிலைமை புரிவது கஷ்டம்தான்.  பரந்த பூமியைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியிருக்கிறது என் உடல்.  அப்படி பூமியைவிடவும் பெரிய உடல்கொண்ட என்னுடைய வெப்பத்தை எதெதெல்லாம் பாதிக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாது.  ஆனால் ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள்.  மற்ற எல்லாரையும் போலத்தான் நானும்.  என்னில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான் மட்டும் காரணம் இல்லை.  எப்படி இந்த ஏரி என்னால் உறைந்து போனதோ, அதுபோல என்னில் ஏற்படும் மாற்றங்களையும் வெளியிலிருந்து மற்றவர்களே தூண்டுகிறார்கள்.”

யானைக்கு இந்த பதில் ஆச்சரியம் அளிக்கவில்லை.  குற்றமென்று வருகையில் மற்றவரைக் கைகாட்டுவது இயல்புதானே.  யானை காற்றிடம் சொன்னது, “நீ சொல்வது நியாயமாகத்தான் இருக்கிறது.  உன்னை இப்படிக் குளிரவைத்தது யார் என்று சொல், நான் அவர்களிடம் சென்று கேட்கிறேன்.  மாதக்கணக்கில் இப்படி நீரை உறைய வைத்தால் மிருகங்கள் எப்படி வாழும்?  இதற்குக் காரணமானவர்களிடம் சென்று நான் அவர்கள் செய்யும் அநியாயத்தைச் சுட்டிக்காட்டப் போகிறேன்.”

காற்று கொஞ்ச நேரம் யோசித்து பதில் சொன்னது.  “இதை யார் ஆரம்பித்தார் என்று தேடிப் போக நீ நினைப்பதன் காரணம் புரிகிறது.  ஆனால் ஆரம்பித்தவர் மட்டுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?”  காற்று சொல்ல வருவது யானைக்கு விளங்கவில்லை.  “நீ என்ன நினைக்கிறாய் என்று புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாகச் சொல்” என்று காற்றைக் கேட்டது.

“என்னைச் சுற்றி மாற்றம் நிகழும்போது நான் குளிர்கிறேன் என்றால் அதற்கு நான் காற்றாக இருப்பதும்தானே காரணம்?  உன்னையும் மற்ற விலங்குகளையும் இந்த ஏரியையும் செடிகொடிகளையும் ஒரே அளவில்தானே நான் குளிர வைக்கிறேன்.  ஆனாலும் இந்த ஏரி மட்டும்தானே உறைகிறது... நீங்கள் உறையாமல்தானே இருக்கிறீர்கள்?”

இதைக் கேட்டதும் ஏரிக்குக் கோபம் வந்தது.  “அப்படியானால் உறைந்தது என் குற்றம் என்கிறாயா?” என்று கேட்டது.  “இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை.  குளிரில் உறைவது உன்னுடைய குணம்.  உலகத்தைக் குளிரூட்டுவதும் வெப்பமூட்டுவதும் என் குணம்.  ஒருவேளை நான் இப்படிக் குளிராமலேயே இருந்திருந்தால் உனக்கு உறையும் குணம் உண்டு என்பதே உனக்குத் தெரிந்திருக்காதல்லவா?  உன்னைப் பற்றி நீயே அறிந்துகொள்ள நான் ஒருவகையில் காரணமாய் இருந்தேன் என்று நான் சொன்னால் அதுவும் சரிதானே?”

யானைக்கு அந்த நியாயம் புரிந்தது.  நடப்பது ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருக்கும் என்று தெரிந்தாலும் தன்னுடைய இப்போதைய துன்பத்துக்கு யார் பொறுப்பு என்று அதற்கு விளங்கவில்லை.  காற்றிடம் கேட்கலாமா என்று யோசித்தது.  ஆனால் காற்றும்தான் என்ன சொல்லும், நீரில்லாமல் இருக்க முடியாது என்பது உன் குணம், ஆகவே உனக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்று சொல்லும்.  யார் காரணம் என்று யோசிப்பதைவிட வேறு எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்பது உத்தமம் என்று முடிவு செய்த யானை ஏரிக்கும் காற்றுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றது.

திங்கள், 14 ஜனவரி, 2013

மருத்துவம்

கடந்த சில மாதங்களாக என் வாயின் இரண்டு பக்கங்களிலும் காயமாகி இருந்தது.  சிட்னியில் வீட்டில் இருக்கும்தோறும் காயம் மட்டுப்படாமலே இருந்தது.  மருந்து போட்டால் கொஞ்சம் குறையும், ஆனால் ஓரிரு நாள்களிலேயே மீண்டும் வந்துவிடும்.  பயணம் செய்யும் ஒவ்வொரு முறையும் காயம் சிலநாள்களிலேயே ஆறியது; சிட்னி திரும்பி வந்ததும் சிலநாள்களிலேயே காயம் பழையபடி திரும்பி வந்தது.  காயத்தைச் சுற்றிலும் எப்போதும் தோல் வறண்டிருக்கும்.

முதலில் நான் நினைத்தது என்னவென்றால் சிட்னியின் பருவநிலை காரணமாக என் தோல் வறண்டு போகிறது.  மிகுந்த வறட்சியால் தோல் வெடித்துக் காயம் உண்டாகிறது.  பயணம் செய்த இடங்களின் (கோவில்பட்டி, சான் ஃபிரான்சிஸ்கோ, பாஸ்டன்) பருவநிலையை — முக்கியமாக காற்றிலுள்ள ஈரப்பதத்தை (humidity) — சிட்னியுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் பெரிய மாறுதல் ஒன்றும் தெரியவில்லை.  அதனால் நான் நினைத்தது சரியான காரணம் இல்லை என்று தெரிந்தது.  ஆனாலும் வேறு எந்த வகையிலும் சிட்னியில் இருக்கும்போது மட்டும் வரும் காயங்களை விளக்க முடியவில்லை.

சென்ற வாரம் தற்செயலாக எனக்குத் தோன்றியது.  ஒருவேளை நான் உபயோகிக்கும் சோப் எனது காயங்களுக்குக் காரணமாக இருக்கலாமோ என்று.  என் தோலில் சிலபகுதிகளால் ஈரத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே முடியாது.  சில சோப்புகள் தோலில் மிக ஆழமாகச் சுத்தம் செய்து தோலில் இருக்கும் எண்ணெய்ப்பசையை முழுதும் நீக்கிவிடும்.  நான் வீட்டில் உபயோகித்த சோப்பும் அப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இப்போது சிலநாள்களாக மனைவியின் shower gel-ஐ உபயோகித்து வருகிறேன்.  காயமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மட்டுப்பட்டுவிட்டது.
==========


முன்காலத்தில் பாரம்பரிய இந்திய மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் நோயாளிகளின் வாழ்க்கை முறை, குடும்ப சூழ்நிலை போன்ற எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருப்பார்களாம்.

என் சொந்த அனுபவத்தில் நான் அறிந்துகொண்ட ஒன்று, மனித உடல் என்பது ஒரு நீரோட்டம் போல ஓடிக்கொண்டே இருப்பது.  அதனை அறிந்துகொள்வதற்கும் வைத்தியம் செய்வதற்கும் அதன் ஓட்டம் பற்றிய அறிதல் கொஞ்சம் இருக்க வேண்டும்.

ஒரே நதி மலையில் ஓடும்போது ஓரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும், தரையில் ஓடும்போது மற்றொரு வேகம்-வீச்சு-சுவை-ஆழத்துடனும் ஓடுகிறது.  அந்த நதியை ஏதேனும் ஓரிடத்தில் மட்டும் ஆராய்ந்தால் அந்நதியின் குணநலன் நமக்கு முழுதும் தெரியாதுபோக வாய்ப்புள்ளது.

அதேபோலத்தான் மனித உடலும்.  இந்தக்காலத்து மருத்துவர்கள் பலரும் தங்களது நோயாளியைப் பற்றிய ஒரு பரந்த புரிதலுடன் வைத்தியம் செய்வதில்லை.  நோயாளி மருத்துவரிடம் செல்லும் அந்த நிமிடத்தில் உடல் இருக்கும் நிலையைப் பொறுத்து மட்டுமே மருத்துவம் செய்யப்படுகிறது.

என் தாத்தா முன்பு சொல்வார் “டாக்டர்களுக்கு என்ன தெரியும்?  கேட்டா எனக்கு சுகர் இருக்கும்பான்.  நான் நல்லாத்தான் இருக்கேன்” என்று.  சின்ன வயதில் அவர் அப்படி ஏன் சொன்னார் என்று புரியவில்லை.  அவர்தான் விவரமில்லாமல் பேசுகிறார் என்றுதான் நினைக்கத்தோன்றியது.  ஆனால் உண்மையில் அவருக்கிருந்த உபாதைகளை மருத்துவர் எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் இப்போது நினைக்கிறேன்.  அவரைப்போலவே நானும் மருத்துவர்களின் ஆலோசனை பெறுவதைத் தவிர்த்து, கூடுமானவரை நானே என் ஆரோக்கியத்துக்குத் தேவையானதைக் கவனித்துக்கொள்கிறேன்.