வியாழன், 7 ஜூலை, 2016

குழந்தைகளும் நானும்

என் அண்ணன் சரவணனுக்கு சிறு வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் பிடிக்கும். எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் தூக்கிக் கொஞ்சி விளையாட ஆரம்பித்து விடுவான். எனக்குக் குழந்தைகளுடன் விளையாடுவதில் எப்போதுமே ஒரு தயக்கம் இருந்து வந்தது. என்னிடம் வலிய வந்து பழகும் குழந்தைகளுடன் மட்டும் விளையாடுவேன். மற்ற குழந்தைகளிடம் இருந்து கொஞ்சம் தொலைவிலேயே தான் இருப்பேன்.

என் மகன் அருண் விஷயத்தில் நான் அப்படி இல்லை. (என் மகன் அல்லவா?) பிறந்து சில நாள்களிலேயே அவனை நானாகவே தூக்கி வைத்துக் கொள்ளத் தொடங்கினேன்.

அருண் ஒரு மாதக் குழந்தையாய் இருந்த போது
சில நாள்களுக்கு முன் ஒரு நண்பர் தனது ஒரு வயதுக் குழந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தக் குழந்தையை இதற்கு முன் பார்க்கும் போதெல்லாம் நான் சிரிப்பது, தொடாமல் அவளுக்கு விளையாட்டுக் காட்டுவது என்பதோடு நிறுத்திக் கொள்வேன். ஆனால் இப்போது என்னையறியாமல் அவளைத் தூக்கி விளையாடத் தொடங்கி விட்டேன். நண்பர் வீட்டை விட்டுப் போன பிறகு தான் என் நடத்தையில் ஏற்பட்டிருந்த மாறுபாட்டை நான் உணர்ந்தேன்.

ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோரைப் பலவிதங்களில் மேம்படுத்துகிறது. பிறந்து சில மாதங்களிலேயே என் அருண் என்னை மேம்படுத்தத் தொடங்கி விட்டான்.

வெள்ளி, 1 ஜூலை, 2016

உழைப்பு


ஒரு மாம்பழம் உருவாக அந்த மரம் செலவிடும் உழைப்பு என்ன? ஒரு விதையாக இருந்து, செடியாக வாழந்தது முதல் வருடக் கணக்கில் உழைத்த உழைப்பு காய் காய்க்கத் தேவையான அடிப்படைகளை அந்த மரத்துக்குத் தருகிறது. முந்தைய பருவத்திலிருந்து (season) இந்தப் பருவம் வரையிலான அந்த மரத்தின் உழைப்பு அதில் இப்போது காய்த்திருக்கும் ஒவ்வொரு பழத்திற்கும் காரணம். மாம்பழத்தைக் கடித்துத் தின்னும் நாம் அந்த உழைப்பைப் பற்றி யோசிப்பதுண்டா?

திங்கள், 25 ஜனவரி, 2016

‘கற்பழிப்பு’ என்னும் அபத்தம்

கற்பு என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் தவறுவது என்பது ஒருவரது சொந்தச் செயலாலேயே நிகழ முடியும். நான் பொய் சொன்னால் நான் ஒழுக்கம் கெட்டவன்; என்னிடம் ஒருவர் பொய் சொன்னால் பொய் சொன்னவரே ஒழுக்கம் கெட்டவர்; எனது ஒழுக்கத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணைப் பலாத்காரம் செய்தால் அதை ‘கற்பழிப்பு’ என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணைக் ‘கற்பிழந்தவள்’ என்றும் கூறுகிறோம். இந்த வார்த்தைப் பிரயோகம் நம்முடையது ஆணாதிக்க சமுதாயம் என்பதற்கு இன்னொரு சான்று. ஒரு ஆண் தவறு செய்த இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பழிப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை.

நல்லதொரு தமிழகத்தை விரும்பும் அனைவரும் (முக்கியமாகப் பெண்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சிகள்) பெண்களைப் பழிக்கும் இந்த வார்த்தைகளை இனிமேல் உபயோகிக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பம்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

துன்பப்படுதல்

அடிபட்ட குழந்தை அழுகிறது. வலி குறைந்ததும் விளையாட்டு மீண்டும் தொடர்கிறது. ஏமாற்றமடைந்த குழந்தை அழுகிறது. கொஞ்ச நேரத்திலே வேறு ஏதோ அதன் கவனத்தை ஈர்க்கிறது; குழந்தை அழுகையை மறக்கிறது. பயமடைந்த குழந்தை அழுகிறது. அன்னை வந்து பயம் போக்கியதும் அழுத குழந்தை சிரிக்கிறது.

குழந்தையாய் இருக்கையில் மட்டுமல்ல. வளர்ந்த பிறகும்கூட அழும் நம் மனம் சீக்கிரமே அழுகையை நிறுத்தி வேறு எதையோ நினைக்க ஆரம்பிக்கிறது. நாம்தான் அதை அனுமதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் "எனக்கு இப்படி நடந்ததே" என்று வலுக்கட்டாயமாக யோசித்து அழுகையை வரவைத்துக் கொள்கிறோம்.

துன்பம் நேர்ந்திருக்கும்போது நாம் கவலைப்படத்தான் வேண்டும் என்று நமக்கு நாமே விதித்துக்கொள்ளும் நிபந்தனைதானே இது?

பார்க்க: தீதும் நன்றும்

சனி, 16 ஜனவரி, 2016

தீதும் நன்றும்

தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாகவே துன்பப்படுவது போற்றப்படுகிறது. நாயகர் (நாயகன், நாயகி, அவர்களது குடும்பம், நண்பர்கள் முதலியோர்) நல்லது மட்டுமே எப்போதும் செய்தாலும் அவர்களைத் துன்பம் வந்தடைவதுபோல் காட்சிகள் வைப்பது மட்டுமல்லாது நேரடியாகவே ‘துன்பப்படுவது உயரந்தது’ என்று சொல்வதும்கூட உண்டு.
பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும்
உள்ளம் கேட்பேன் (வரிகள் • பாடல்)

இந்தப் பாடல் வரிகள் அதற்கு ஓர் உதாரணம். இந்தப் பாடலை நான் முதல் முதலில் கேட்டபோது எனக்கு இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது இருந்திருக்கும். அதற்கு முன் துன்பப்படுவது பெருமை என்று ஒரு உள்ளுணர்வு மட்டும் இருந்த எனக்கு இதன்பின்னர் துன்பப்படுவது வெளிப்படையான விருப்பமாகவே ஆனது.

ஒரு வேலையை இரண்டு வழிகளில் செய்யலாம் என்றால் அதில் கஷ்டமான வழியையே தேர்ந்தெடுப்பேன். கஷ்டமான வழியில் அந்த வேலையை முடித்தால் கஷ்டப்பட்டு சாதித்தோம் என்ற தற்பெருமை. வேலையை முடிக்காமல் போனால் கஷ்டப்பட்டோம் என்பதாலேயே தற்பெருமை. ரொம்ப வருடங்களுக்கு இது தொடர்ந்தது. அந்த நேரத்தில் வாழ்க்கையில் சந்தோஷத்தைத் தேடுபவர்களை இளக்காரமாக நினைத்ததும்கூட உண்டு.

நாள் ஆக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக என் மனதில் மாற்றம் ஏற்பட்டது. என் மன மாற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், முக்கியமாக ஓஷோவின் புத்தகங்கள் என் மன மாற்றத்தை ஆரம்பித்து வைத்தன. நான் மிக மதிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு வாசகருக்கு எழுதிய கடிதம் அதீதமான தூண்டுதலைத் தந்தது. “சுய இரக்கம் என்பது தன் ரத்தத்தையே சுவைப்பது போன்றது” என்று அவர் சொன்னார். இன்றைக்கு ருசியாக இருக்கும், ஆனால் நாளடைவில் அதன் மூலம் நல்லது எதுவும் வராது.

உங்கள் துன்பத்தை நீங்கள் சிலுவை சுமப்பதுபோல் சுமந்தாலோ, உங்களுக்கு இருக்கும் துன்பம் அநியாயமாக உங்கள்மேல் சுமத்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தாலோ, உங்கள் நிலையில் நானும் இருந்தவன் என்ற முறையில் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது ஒன்றுதான். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது வாழ்வின் அடிப்படை உண்மைகளில் ஒன்று. வாழ்க்கையில் நீங்கள் படும் துன்பங்களுக்கும் இன்பங்களுக்கும் நீங்களேதான் காரணம். மற்றவரால் துன்பமோ இன்பமோ வந்ததாக நினைக்கும் வரை கடலலையில் அகப்பட்ட இலை போல நீங்கள் அலைக்கழிக்கப்படுவீர்கள்.