வியாழன், 22 ஜனவரி, 2009

வாழ்க்கை? -- எதிர்வினை

நண்பர் அமரின்  வாழ்க்கை? என்ற பதிவிற்கு பின்னூட்டம் எழுத ஆரம்பித்து பெரியதாக வந்ததால் இங்கே பதிப்பிக்கிறேன்.  அந்தப் பதிவையும் ஏற்கெனவே இருக்கும் பின்னூட்டங்களையும் (comments) முதலில் படித்து விடுங்கள். (http://vettiyaa-pesu.blogspot.com/2008/07/blog-post_14.html)

"கடவுளுக்கு வரையறை கிடையாது. க்ச்டுர்ச்து க்கு எப்படி எந்த ஒரு வரையரயும் இல்லையோ, இருக்க முடியாதோ அதுபோல்."

க்ச்டுர்ச்துவைப் பற்றி அதனால்தான் யாரும் பேசவில்லை.  எதைப்பற்றியெல்லாம் நம் மனம் நினைக்கிறதோ, அதற்கெல்லாம் ஒரு வரையறை இல்லாமல் இருக்க முடியாது.  வரையறையே இல்லாத ஒன்று வேண்டும் என்று தேடித்தான் க்ச்டுர்ச்துவை நீங்கள் கண்டடைந்திருப்பீர்கள்.  உங்களளவில், இதை எழுதும்போது, "க்ச்டுர்ச்து என்பது வரையறை இல்லாதது" என்ற வரையறை இருந்திருக்கும்.  கடவுளைக்கூட "வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன்" என்ற வரையறையோடுதான் மனிதமனத்தால் நெருங்க முடியும்.  பிரபஞ்சம் எல்லையற்றது என்று வரையறுப்பதைப் போல.

இங்கே வரையறை என்பது அறிவியலில் உள்ளதுபோல முழுமையான (complete) ஒன்றாக இருக்கத் தேவையில்லை.  ஒவ்வொரு மனமும் அதன் தேவைகளுக்கும் திறனுக்கும் ஏற்ப மேலோட்டமான அல்லது மிகவும் தெளிவான வரையறைகளை எல்லாவற்றுக்கும் அளிக்கிறது.  இந்த வரையறைகளை ஒரே மனம் (மனிதன்) கணந்தோறும் மாற்றிக்கொண்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

"Could you please give a sample?"

அந்தப் புத்தகத்தில் நான் படித்ததையே சொல்கிறேன்.  நீங்கள் சின்ன வயதில் டாக்டராக ஆசைப்படுகிறீர்கள்.  முடியாமல் போகிறது.  நீங்கள் ஒரு வெற்றிகரமான இன்ஜினியராகிறீர்கள்.  பல வருடங்களுக்குப் பின் இதை நினைத்துப் பார்க்கிறீர்கள்.  ஒரு டாக்டராக ஆகியிருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று கடவுளுக்கு நன்றி செலுத்துகிறீர்கள்.  தவறான ஆசையில் நீங்கள் இருந்த நேரத்தில் உங்களுக்குச் சரியான ஒன்றை அளித்தவர் கடவுள்.

இந்த வரையறை நடராஜ குருவினுடையது.  இதை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை.  நான் சொல்ல வந்தது என்னவென்றால் ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்று ஒன்றை வரையறுக்கிறான்.  ஒருவன் கடவுள் இல்லை என்று சொல்லும்போது அவன் வரையறையில் எது கடவுளோ அது இல்லை என்று அவன் நம்புகிறான்.

"கடவுள் என்று நீங்கள்/குரு வரையறுப்பதும் இல்லை."

கடவுள் என்பதை "இல்லை" என்று உங்கள் மனம் வரையறுக்கிறது போலும்.  தவிரவும் மற்றவர்களது கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.  திருச்செந்தூர் கோயிலிலுள்ள முருகன் சிலைதான் கடவுள் என்று நம்பும் ஒருவனின் கடவுள் இல்லை என்று சொல்ல முடியுமா உங்களால்?  அந்த சிலைதான் இத்தனை வருடங்களாக நம் கண் முன்னேயே இருக்கிறதே.  சிலை இருக்கிறது, ஆனால் கடவுள் இல்லை என்று சொல்வீர்களேயானால் நீங்கள் "சிலையே கடவுள்" என்ற அந்த மனிதனுடைய வரையறையை ஏற்காமல் நீங்கள் வரையறுக்கும் கடவுளைப் பற்றித்தான் நீங்கள் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.