யாதும் ஊரே

பதினொன்றாம் வகுப்பில் என்று நினைக்கிறேன்.  "யாதும் ஊரே" புறநானூற்றுப் பாடல் மனப்பாடச் செய்யுளாக இருந்தது.  முதல் இரண்டு வரிகளைத் தவிர மற்ற எதையும் வாசிக்கக்கூட முடியவில்லை -- கேள்விப் பட்டிராத வார்த்தைகள் அதுவரை பார்த்திராத முறையில் கோர்க்கப்பட்டு ஆக்கப்பட்டிருந்தது அப்பாடல்.  ஒரு வீம்புக்காகத்தான் அதை மனப்பாடம் செய்தேன்.  புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருக்கும், அல்லது நினைவில் வைத்து பரீட்சையில் எழுதக் கஷ்டமாக இருக்கும் பகுதிகளை நான் பொதுவாகப் படிப்பதில்லை.  இந்தப்பாடலை மனப்பாடம் செய்ய என்னை எது தூண்டியது என்று தெரியவில்லை.

பள்ளியில் படிக்கையில் அந்தப் பாடலின் அர்த்தம் முழுவதுமாய் விளங்கவே இல்லை.  ஆனாலும், அந்தப் பாடலில் என்னை மயக்குமாறு எதுவோ இருந்தது.  கல்லூரி நாட்களில் பலமுறை எனக்குள்ளேயே அந்தப்பாடலை சொல்லிக்கொள்வேன்.  MCA படித்த காலத்தில்தான் பாடலின் அர்த்தம் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத்தொடங்கியது.  அன்றிலிருந்து இன்று வரை, குறைந்தது ஒரு ஆயிரம் முறையாவது மனதுக்குள் அந்தப் பாடலின் வரிகளைச் சொல்லியிருப்பேன்.

எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன் இப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை எழுதி வைத்து, அதில் அவன் பெயரைக்கூட எழுதி வைக்காமல் அவன் போய்ச் சேர்ந்து விட்டான்.  சில நேரங்களில் பாடலின் ஆழத்தை நினைத்துப் பார்க்கையில் அவன் காலில் விழுந்து அழவேண்டும் போலிருக்கிறது.  எத்தனை எளிமையாய்ச் சொல்லி விட்டான் -- "நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படூஉம்" என்பதால் எவனுக்கும் மரியாதையும் இல்லை, எவனையும் குறைத்துப் பேசுவதுமில்லை.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னாதென்றலு மிலமே மின்னொடு
வானம் தண்டுளி தலைஇ யானது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
முறைவழிப் படூஉ மென்பது திறவோர்
காட்சியில் தெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை இகழ்த லதனினு மிலமே.

கருத்துகள்

 1. kuselan ennakum intha pattu adikkadi manthil thonrum anal enakku itharkkana artham theriyathu.........

  பதிலளிநீக்கு
 2. எல்லா ஊரும் எம் ஊர்
  எல்லா மக்களும் எம் சொந்தம்
  நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
  துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
  சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
  இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
  வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
  பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
  இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
  தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
  ஆதலினால்
  பிறந்து வாழ்வோரில்
  சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
  பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிறந்த பாடல் அது! பலரது மனதில் பதிக்கப்பப்பட்ட ஒன்று! நானும் அதற்கு, அறிமுக நாள் முதல் என்றுமே விரும்பியே!
   'பெயரில்லா' அவர்களின் நவீன தமிழாக்கம் நன்றாக உள்ளது. கடைசி இரு வரிகளுக்கேற்ப உங்களை போற்றப்போவதில்லை :)

   நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்