இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தியான மந்திரம்

திருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும்.  ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம். சில திருக்குறள்கள் அப்படித்தான்.  படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும்.  திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும்.  அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும். சமீப காலத்தில் மிகப்பெரிய ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது.  மிகவும் எளிமையான வரி.  ‘ அச்சம் தவிர் .’  ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது. பயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது.  கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் பயம் ...

மதிப்பீடு

சிலையாக மாறிப்போவதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் சிலையாக நிற்கும் மனிதன் சிலைப்படுத்தப்பட்டிருக்கும் பண்புகளிலிருந்து ஒருகாலத்தில் மாறுபட்டிருந்தான் என்பதையோ, இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருந்தால் மாறியிருக்கக்கூடும் என்பதையோ சொல்ல முடியாமல் போவதுதான்.  பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் மலர்களை வைத்தே மீதிப் பதினோரு ஆண்டுகளிலும் மதிப்பிடப்படும் குறிஞ்சிச்செடி போல மனிதர்களும் பெரும்பாலும் தவறாகவே மதிப்பிடப்படுகிறார்கள்.

பாண்டவர் பூமி

நான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது பாண்டவர் பூமி படம் வந்தது.  கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்.  என் அண்ணனுடைய நண்பர் ஒருவர் “அந்தப் படமெல்லாம் பார்ப்பியா நீ?” என்று நக்கலாகக் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது. படம் முடிந்தபின் “அப்படியொன்றும் மோசமான படம் இல்லை” என்றுதான் தோன்றியது.  ஆனால் கொஞ்சம் நாள் ஆக ஆக அதிலிருந்த ஒரு விஷயம் மட்டும் மனதில் ஆழமாக நின்றுவிட்டது.  “ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களுக்கு தனிப்பட்ட நியாய தர்மங்கள் இருக்கும்.  பொதுவான நியாய தர்மங்களை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுவரக்கூடாது.  வெளிநபர்களால் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது” என்பதுதான் அது.  அந்தப்படத்தில் இப்போது நினைவிலிருப்பதும் அநேகமாக இந்த ஒரு விஷயம்தான். ஒரு ஆர்வத்தில் YouTube-ல் தேடிப்பிடித்து பாண்டவர் பூமியைப் பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் பத்து நிமிடம் தாண்டுவதற்குள்ளேயே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.  முன்பெல்லாம் கிட்டத்தட்ட சேரனின் எல்லாப் படங்களுமே பிடி...

பின்தொடரும் நிழலின் குரல்

எதிர்பார்த்ததைவிட சீக்கிரமாகவே பின்தொடரும் நிழலின் குரலை இந்தமுறை வாசித்து முடித்துவிட்டேன்.  ஏற்கெனவே ஒருமுறை படித்ததுதான் என்பது ஒரு காரணம்.  புத்தகம் படிக்க தினமும் கொஞ்ச நேரமாகிலும் வேண்டும் என்பதற்காகவே தினமும் ஈடுபடும் சில வேலைகளைக் குறைத்துக்கொண்டதும் ஒரு காரணம்.  (மூன்று தொழில்நுட்ப செய்தி வலைதளங்களுக்குப் பதிலாக இப்போது படிப்பது ஒன்றை மட்டும்.  Twitter, Facebook ஆகியவற்றில் கணக்குகளை மூடியாயிற்று.  Google+-லும் ஏகப்பட்ட பேரைப் பின்பற்றாமல் கொஞ்சம் நிதானத்துடன் இருப்பது.  இவை முக்கியமான மாற்றங்கள்.) நாவலில் எனக்குப் பிடித்த சில வரிகள்: அதிகாரமும் மகத்துவமும் தனிமையை உண்டு பண்ணுகின்றன. மனைவியின் மடியிலோ மகள் மடியிலோதான் மனிதன் நிம்மதியாகச் சாகமுடியும். புரட்சியாளனுக்குத் தனிமை விதிக்கப்பட்டிருக்கிறது.  கருணையின்மை அவன்மீது பாயக் காத்திருக்கிறது.  இலட்சிய வேகத்தால் மறைக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட, ஒவ்வொன்றும் அவனை அணுகி கணக்குத் தீர்க்கக் காத்திருக்கின்றன.  காலம் ஒரு தருணத்தில் அவனை உதிர்த்துவிட்டுத்தான் அடுத்த அடியைத் தூக்கி வைக...

சொல்லப்படாத சொற்கள்

காதல் என்று வருகையில் நான் ஒன்றும் பெரிய மேதையில்லை.  ஆனாலும் என்னிடமும் தங்கள் ஏற்கப்படாத காதல் குறித்து சிலர் அறிவுரை கேட்டிருக்கிறார்கள்.  (அல்லது ஒருவேளை நானாகத்தான் சொல்லியிருக்கிறேன், அவர்கள் கேட்காமலேயே!) என்னுடைய அறிவுரைகள் எளிமையானவை.  அதில் பிரதானமானது “நீ விரும்பும் அவளிடம் (அல்லது அவனிடம்) உன் மனதிலிருப்பதை நேரடியாக, வெளிப்படையாகச் சொல்லிவிடு” என்பது தான்.  எதையும் மிச்சம் வைக்காமல் மனதிலுள்ளவற்றைச் சொல்லிவிடுதல்.  அப்படிச் சொல்வதாலேயே நாம் விரும்பும் அந்த நபர் நம் அன்பை ஏற்றுக்கொண்டு விடுவதில்லை, ஆனால் சொல்லிவிடுவது நாம் இழந்துவிட்ட சமநிலையை நமக்கு மீண்டும் அளிக்கும்.  அந்த சமநிலையில் இருந்துகொண்டு நம் ஆசையைப் பார்ப்பதே மிகப் பெரிய மாற்றம். பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு சொற்றொடர்: “கூறப்படாத சொற்கள் முளைவிட்டு வளர்கின்றன”.  படித்தவுடன் தோன்றியது இதுதான்.  நாம் சொல்ல நினைத்து ஆனால் சொல்லாமல் போன சொற்கள் நம்முள்ளேயே ஊறித் திளைத்து வளர்கின்றன... நம்முள் இருக்கையில் அவை வாலி போல் நம் பலத்தில் பாதியை உறிஞ்சி விடுகின்றன.  ...

இரு பறவைகள்

“ இலக்கியம் நம்மைக் கலைத்துப் போட்டு விடுகிறது.  நம்மை நாமே திரும்பத் தொகுத்துக்கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்பவையே அந்த இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை ” என்று எங்கோ ஜெயமோகன் எழுதியதாய் ஞாபகம்.  இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரே படைப்பு வேறுபட்ட காலகட்டங்களில் நம்மை வெவ்வேறு விதங்களில் கலைத்துப் போட்டுவிடக் கூடும்.  திரும்பி நம்மை நாமே தொகுத்துக் கொள்கையில் நாம் வேறுவேறான விஷயங்களைக் கண்டறியக் கூடும்.  எனவே தான் மறுவாசிப்பு என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  என்னை மிகவும் பாதித்த நாவல்களை மீண்டும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டுமென விரும்புவேன். ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை சில வருடங்களுக்கு முன் முதல் முதலாக வாசித்தேன்.  பல விதங்களில் அந்த நாவல் அப்போது பிடித்திருந்தது/என்னைப் பாதித்திருந்தது.  அவ்வப்போது அதன் சில பகுதிகள் மட்டும் நினைவில் வந்துபோகும்.  தூத்துக்குடி மாதா கோவிலுக்குத் தற்செயலாக மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்றிருந்தபோது இந்நாவலில் ஏசு கிறிஸ்து வரும் அத்தியாயம் நினைவுக்கு வந்து மன எழுச்சி தந்தது...

பட்டினத்தாரும் பஞ்சகால எறும்பும்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே எதனைக் கொண்டு நாம் வந்தோம் எதனைக் கொண்டு போகின்றோம் ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே. இளையராஜா ராகம் போட்டுப் பாடும்போது கேட்க இதமாத் தான் இருக்கு.  சொல்ற வார்த்தைகள்ல அர்த்தம் இருக்குற மாதிரியும் படத்தான் செய்யுது.  “எனக்கு அதுதான் வேணும்”னு அடம்பிடிக்கிற மனசுமேலே லேசாக் கோபமும் வருது.  இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு நிஜமாவே மனசுக்குள்ள தோனுது. ஆனா ஒரு விஷயம் திடீர்னு நினைவுல வந்து நம்மையே பாத்து சிரிக்கவும்தான் செய்யுது.  அதுவேணும் இதுவேணும்னு ஆசைப்படுற மனசு ஓடுன்னும் இருக்கிறதைக் கொண்டு வாழத் தெரிஞ்ச மனசு பொன்னுன்னும் தானே நினைக்கிறோம்?  அப்போ என்கிட்ட இருக்கிற ஓட்டு மனசு எனக்கு வேண்டாம், அதைவிட ஒசத்தியான பொன் மனசைத் தேடிப் போகப் போறேன்னு மனசு சொல்லுது.  அதையும் ஆசையைத் துறக்கப் போற துறவி மாதிரி வேஷம் போட்டுகிட்டுச் சொல்லுது.  அந்த வேஷத்தை நம்புற நாமதான் நித்யானந்தா பாவின்னு கூச்சலும் போட்டுக்கிறோம்.  ஓட்டையும் பொன்னையும் ஒ...

மிச்சம்

தொண்டை வரை வந்தும்சொல்லாமல் போன வார்த்தைகள். பாதி எழுதியபின் அனுப்ப மனமில்லாமல் கிழித்தெறிந்த கடிதங்கள். கடையில் பார்த்து, பிடித்து, ஆனாலும் உனக்காக வாங்காத பரிசுகள். தினமும் வந்து போகும் நினைவுகளைத் தவிர்த்தால், உனக்கும் எனக்குமான உறவில் இவைதான் மிச்சம் இப்போது.

அரவான்

‘வெயில்’ மாதிரியே அரைவேக்காட்டுத் தனமான ஒரு வசந்தபாலன் படம்.  அதற்கு மேல் எதுவும் சொல்லிப் பிரயோஜனமில்லை. பி.கு: விவேக் காயாமொழியின் கருத்துடன் உடன்படுகிறேன்.

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

வைரமுத்துவின் ‘பாற்கடல்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன்.  புத்தகத்தின் முன்னுரை வாசிக்கையில் தோன்றியது “காலையில் நாஞ்சில் நாடன் வாசித்து முடித்த கையோடு மதியம் வைரமுத்துவை வாசிக்கத் தொடங்குவது நல்ல யோசனையில்லை” என்பது தான் :-)  இருந்தாலும் புத்தகத்தில் சில நல்ல பகுதிகள் இல்லாமல் இல்லை. பாற்கடல், குமுதத்தில் வெளியான கேள்வி-பதில் தொகுதி.  பல கேள்வி-பதில்கள் என்னைக் கவர்ந்தன.  ஒருசிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கே: வாழ்க்கை என்பது? ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம். கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்? ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.” கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்? ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்; காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்; அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்; நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்; கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்; மூத்த சவரத் தொழிலாளி; விதவைகளின் மாமியார் மற்றும் விலைமகளின் தாயார்.

i என்னும் ஆங்கில எழுத்து

படம்
ஆங்கில எழுத்து ‘i’-யை தமிழ் ‘ஐ’ மாதிரி தான் நினைவு தெரிந்த நாள் முதல் உச்சரித்து வந்திருக்கிறேன்.  கொஞ்சநாள் முன்பு ஒரு ஆஸ்திரேலியர் lion என்பதை நம்மூரில் சொல்வது போல் உச்சரிக்காமல் கிட்த்தட்ட ‘லாயன்’ என்பது மாதிரி உச்சரிக்கும் போது தான் நான் எத்தனை காலம் ‘லயன்’ என்று தவறாக உச்சரித்து வந்திருக்கிறேன் என்பது விளங்கியது. hi என்பது ‘ஹை’ அல்ல ‘ஹாய்’ என்பது நம் பலருக்குத் தெரியும்.  (ஒருவேளை உங்களுக்குத் தெரியாதென்றால் இனிமேல் அதை ‘hai’ என்று எழுதாதீர்கள் :-).  அதைப் போலத்தான் lion என்பதையும் உச்சரிக்க வேண்டும் ( define lion என்று Google-ல் தேடி இந்த ஸ்பீக்கர் படத்தை அழுத்திப் பாருங்கள்).  இதைப் போலவே தான் biology என்ற வார்த்தையிலும் i-க்கு நாம் பொதுவாக வேண்டிய அளவு அழுத்தம் கொடுப்பதில்லை.  இது மாதிரி சின்னச்சின்ன விஷயங்கள் நாம் பேசும் ஆங்கிலத்தில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகின்றன என்பது ஆச்சர்யம் தரும் விஷயம்.

வானத்திலே திருவிழா

வானத்திலே திருவிழா வழக்கமான ஒருவிழா இடி இடிக்கும் மேளங்கள் இறங்கி வரும் தாளங்கள் மின்னலொரு நாட்டியம் மேடை வான மண்டபம் தூறல் ஒரு தோரணம் தூயமழை காரணம் எட்டுத்திசைக் காற்றிலே ஏகவெள்ளம் ஆற்றிலே தெருவிலெல்லாம் வெள்ளமே திண்ணையோரம் செல்லுமே பார் முழுதும் வீட்டிலே பறவைகூடக் கூட்டிலே தவளை மட்டும் பாடுேம தண்ணீரிலே ஆடுமே திறந்தவெளி வேடிக்கை ஆண்டு தோறும் வாடிக்கை

பல வேடிக்கை மனிதரைப் போலே

ஒரு குத்துமதிப்பாகத்தான் நாடோடிகள் படம் பார்க்கத் திரையரங்கில் போய் உட்கார்ந்தோம்.  எந்த எதிர்பார்ப்பும் இல்லை எனக்கு.  படத்தை முழுவதுமே ரசித்துப் பார்த்த ஞாபகம் இருக்கிறது.  நகைச்சுவைக் காட்சிகளெல்லாம் ரசிக்கும்படி இருந்தன. அதே மாதிரி குத்துமதிப்பாகத்தான் போராளியும் இப்போது பார்த்தேன்.  படத்தில் பாதியிலேயே இயக்குநர் சமுத்திரக்கனியைப் பற்றி விபரம் தேடிப் பார்க்க வைக்குமளவுக்கு எனக்குப் பிடித்திருந்தது.  அவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராய் இருந்தார் என்பதை அறிகையில் "அதானே பாத்தேன்" என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டேன் (என்னவோ பாலச்சந்தர் பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி!).  சமுத்திரக்கனி, மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒரு இயக்குநர். *** ஊருக்குப் போகும் சமயங்களிலெல்லாம் படம் பார்க்க வேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வதுண்டு.  ஆனால் திரையரங்கில் ஓடும் படங்களின் லட்சணத்தில் எந்தப் படத்தையும் போய்ப் பார்க்கத் தோன்றுவதில்லை.  (முன்பு மாதிரி நல்ல படம் எது என்று பகுத்தறியும் திறனில்லை என்பதும் ஒரு காரணம்.)  தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் காலத...

சார்பு

ஒரு கொடியில் வளரும் புழு அக்கொடியின் இலைகளையே தின்று உயிர் வளர்க்கிறது.  அந்தக் கொடிக்கோ அருகிலுள்ள மரத்தின் மேல் படராவிடில் வாழ்க்கையில்லை.  கொடியைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் மட்டுமென்ன, மண் இல்லாமல் நின்று விடுமா, இல்லை மழை இல்லாமல் வளர்ந்திடுமா?  எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமி சூரியனும் நிலவும் இல்லாமல் இருந்திடுமா? நடுக்கும் குளிரையும் எரிக்கும் வெயிலையும் நனைக்கும் மழையையும் நன்றியுடன் பார்க்க முடிந்தால் பார்ப்போம்.  அதன்றி வெறுப்புதான் நமக்கு வருமென்றால் அனைத்தையும் வெறுப்புடனே பார்ப்போம்.  குடியா முழுகி விடும்?  அப்படியே குடி முழுகிப் போனாலும் தான் என்ன?