இரு பறவைகள்

இலக்கியம் நம்மைக் கலைத்துப் போட்டு விடுகிறது.  நம்மை நாமே திரும்பத் தொகுத்துக்கொள்ளும்போது நாம் கற்றுக் கொள்பவையே அந்த இலக்கியத்திலிருந்து நமக்குக் கிடைப்பவை” என்று எங்கோ ஜெயமோகன் எழுதியதாய் ஞாபகம்.  இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரே படைப்பு வேறுபட்ட காலகட்டங்களில் நம்மை வெவ்வேறு விதங்களில் கலைத்துப் போட்டுவிடக் கூடும்.  திரும்பி நம்மை நாமே தொகுத்துக் கொள்கையில் நாம் வேறுவேறான விஷயங்களைக் கண்டறியக் கூடும்.  எனவே தான் மறுவாசிப்பு என்பதை நான் முக்கியமாகக் கருதுகிறேன்.  என்னை மிகவும் பாதித்த நாவல்களை மீண்டும் ஒருமுறையேனும் வாசிக்க வேண்டுமென விரும்புவேன்.

ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை சில வருடங்களுக்கு முன் முதல் முதலாக வாசித்தேன்.  பல விதங்களில் அந்த நாவல் அப்போது பிடித்திருந்தது/என்னைப் பாதித்திருந்தது.  அவ்வப்போது அதன் சில பகுதிகள் மட்டும் நினைவில் வந்துபோகும்.  தூத்துக்குடி மாதா கோவிலுக்குத் தற்செயலாக மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்றிருந்தபோது இந்நாவலில் ஏசு கிறிஸ்து வரும் அத்தியாயம் நினைவுக்கு வந்து மன எழுச்சி தந்தது.  அதை மனைவியிடம் சொன்னேன், ஆனால் இந்த விஷயங்களை இலக்கிய அனுபவம் இல்லாதவர்களிடம் சொல்லிப் புரியவைப்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை.

அதன் பிறகு கொஞ்ச நாள்களாகவே மீண்டும் அந்த நாவலை வாசிக்க வேண்டும் என்ற அவா மனதினுள் தோன்றிக் கொண்டே இருந்தது.  திரும்ப வாசிக்கவும் ஆரம்பித்து விட்டேன், ஆனால் 700 பக்க நாவல்களை வாசிப்பது ஏனோ முன்பைவிடவும் சிரமமாக ஆகிவிட்டது.  அலுவலக வேலையில் முன்பைவிடத் தீவிரமாக ஈடுபட்டு விட்டதாலோ என்னவோ.

பின்தொடரும் நிழலின் குரல் நாவலில் ஜெயமோகன் இடையிடையே கவிதை, நாடகம் போன்றவற்றையும் பயன்படுத்தியிருக்கிறார்.  அதில் வரும் ‘இரு பறவைகள்’ என்னும் கவிதை ரொம்பவே பிடித்திருந்தது.

இரு பறவைகள்
வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.

சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள்மீது எம்பித் தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிக்கடல்.

இரு பறவைகள்.
இரண்டிலிருந்தும் வானம்
சமதூரத்தில் இருக்கிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

குழப்பம் leads to புலம்பல்