தியான மந்திரம்

திருக்குறளை மற்ற சில இலக்கியங்கள் போல அல்லாமல் தியான மந்திரங்கள் போலப் படிக்க வேண்டும்.  ஒரு குறளைப் படித்து அதன் அர்த்தம் புரிந்ததும் நிறுத்திவிடாமல், அதை மனதுக்குள் வைத்து அசை போட்டுக்கொண்டிருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்தக் குறளின் முழுமையான பயனை நாம் அடைய முடியும் என்று ஜெயமோகன் எங்கோ சொன்னதாக ஞாபகம்.

சில திருக்குறள்கள் அப்படித்தான்.  படித்து, பொருள் விளங்கியதும் அவை அடிக்கடி நம் நினைவுக்கு வந்துபோய்க்கொண்டே இருக்கும்.  திருக்குறள் தான் என்றில்லை... சினிமாப் பாடல்களோ, சில கவிதை அல்லது நாவல் வரிகளோ, பேசும்போது சிலர் சொன்னதோ[1] கூட அவ்வாறு வந்து போகும்.  அவற்றை மனதில் அசைபோடும் தோறும் நம்முள் அவை மாற்றத்தை உருவாக்கும்.

சமீப காலத்தில் மிகப்பெரிய ஒரு மாறுதலை எனக்களித்த ஒரு வரி பாரதியுடையது.  மிகவும் எளிமையான வரி.  ‘அச்சம் தவிர்.’  ரொம்ப எளிதாகத் தோன்றும் இந்த அறிவுரையைச் செயல்படுத்துகையில்தான்[2] அதன் வீச்சு எனக்கு விளங்கத் தொடங்கியது.

பயம் என்பது ரொம்பவும் அடிப்படையானது.  கிட்டத்தட்ட நம் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு எண்ணத்திலும் பயம் இருக்கிறது.  எல்லா இடத்திலும் இருக்கும் ஒன்றைப் பிரித்துப் பார்ப்பது கடினம் என்பதால் அதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் நாம் வாழ்ந்து வருகிறோம்.  அதைக் கண்டறிவதே ஒரு மகத்தான அனுபவம்.  பயத்தை நம் செயலிலும் எண்ணத்திலும் பிரித்துப் பார்க்க முடிந்துவிட்டால் அதன்பின் அதை நீக்குவது எளிது.

பயம் என்பது நமக்கு நாமே இட்டுக்கொள்ளும் விலங்கு.  அதைக் கழற்றி எறிகையில் கிடைக்கும் சுதந்திரம் நம் உலகத்தின் பரப்பை விரிந்ததாக்குகிறது.
----------

[1] மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்திருந்த நேரம் அது.  நேர்முகத் தேர்வில் ஆங்கிலத்தில் பேசவேண்டும் என்பது வயிற்றில் புளிகரைத்துக் கொண்டிருந்தது.  குடும்ப நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் சொன்னார், ‘English is after all a foreign language... you don’t have to be fluent in it’ என்று.  அந்த ஒரு வாக்கியம் பல வருடங்கள் மனதிற்குள் வந்துபோய்க்கொண்டிருந்தது.  அதை அவர் அன்று சொல்லாமல் போயிருந்தால் ரொம்பவே கஷ்டப்பட்டிருப்பேன்.
[2] இந்த மாதிரியான அறிவுரைகளை நான் ‘செயல்படுத்தினேன்’ என்று சொல்வது தவறு.  அந்த அறிவுரையை நினைத்துக்கொள்வேன், அவ்வளவுதான்.  அது மனதில் இருக்கையில் அதற்குமுன் தெரியாத சில விஷயங்கள் தெரியவரும்.  எந்தவிதமான முயற்சியுமே இல்லாமல் என் நடத்தை மாறும்.  ‘கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை’ என்போமே, அது மாதிரி மாற்றம் அதுவாகவே நடந்தேறும்.

கருத்துகள்

  1. "இதுவும் கடந்து போகும்" - இதை எந்த சூழலிலும் பயன்படுத்தலாம் என்பார்கள்.

    என்னைப் பொறுத்தவரை, இவை எல்லாம், நம் மனதை தேற்றிக்கொள்ள உதவும் சில விசயங்களில் ஒன்றே. பாரதி பற்றியோ, அவரது அறிவு பற்றியோ எனக்கு சிறிதும் ஐயம் இல்லை. இருப்பினும், "அச்சம் தவிர்" - சுதந்திரப் போராட்ட காலத்திலே, பயந்து கிடந்த பொது மக்களுக்காக, அதாவது மிகச் சாதரணமான ஒரு விசயத்துக்காக, எழுதப்பட்டதாகக் கூட இருக்கலாம்.

    "ஆண்மை தவறேல்" - இதை இடத்திற்கு தகுந்தற்ப்போல் மாற்றிக்கொள்ளலாம். அடுத்தவனின் மனைவியைப் பார்ப்பதையும் சொல்லலாம், 'பெரியோரை வியத்தலு மிலமே சிறியோரை இகழ்த லதனினு மிலமே' - இதற்கும் சொல்லலாம். ரௌடிகள் எல்லாம் பாரதியின் "ரௌத்திரம் பழகு"கிறார்கள்.

    பாரதியின் "அச்சம் தவிர்" உதவவில்லையா? இருக்கவே இருக்கிறார் நம் திருவள்ளுவர், "அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
    அஞ்சல் அறிவார் தொழில்" என்று சொல்லிவிட்டு திருக்குறள் வழி வாழ்வோம் :)

    பதிலளிநீக்கு
  2. "என்னைப் பொறுத்தவரை, இவை எல்லாம், நம் மனதை தேற்றிக்கொள்ள உதவும் சில விசயங்களில் ஒன்றே."

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. ஆரம்பத்தில் வெறும் மன ஆறுதலை மட்டும் தருவதாகவே இருந்தாலும், நாளாக ஆக வேறுவிதமான பயன்களும் தரலாம் இல்லையா?

    "சுதந்திரப் போராட்ட காலத்திலே, பயந்து கிடந்த பொது மக்களுக்காக, அதாவது மிகச் சாதரணமான ஒரு விசயத்துக்காக, எழுதப்பட்டதாகக் கூட இருக்கலாம்."

    இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவருக்கும் அது தனிப்பட்ட முறையில் அளிக்கும் பயன்/அனுபவம் தான் வாசிக்கும் தனிமனிதனைப் பொறுத்தவரையில் முக்கியமானது இல்லையா?

    "பாரதியின் "அச்சம் தவிர்" உதவவில்லையா? இருக்கவே இருக்கிறார் நம் திருவள்ளுவர்"

    +1! :)

    பதிலளிநீக்கு
  3. "சுதந்திரப் போராட்ட காலத்திலே, பயந்து கிடந்த பொது மக்களுக்காக, அதாவது மிகச் சாதரணமான ஒரு விசயத்துக்காக, எழுதப்பட்டதாகக் கூட இருக்கலாம்."

    ஒரு தேசிய மகாகவியின் சொல்லை ஒரு சிறிய வட்டத்துக்குள் பொருத்தி அர்த்தம் காண்பதை எப்போதுமே என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அவன் காலத்தைத் தாண்டி நின்று கொண்டிருக்கிறான் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு அவனது சொல்லைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுதான் முறையானதாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்