பட்டினத்தாரும் பஞ்சகால எறும்பும்

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வாராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே
எதனைக் கொண்டு நாம் வந்தோம் எதனைக் கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே.

இளையராஜா ராகம் போட்டுப் பாடும்போது கேட்க இதமாத் தான் இருக்கு.  சொல்ற வார்த்தைகள்ல அர்த்தம் இருக்குற மாதிரியும் படத்தான் செய்யுது.  “எனக்கு அதுதான் வேணும்”னு அடம்பிடிக்கிற மனசுமேலே லேசாக் கோபமும் வருது.  இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு நிஜமாவே மனசுக்குள்ள தோனுது.

ஆனா ஒரு விஷயம் திடீர்னு நினைவுல வந்து நம்மையே பாத்து சிரிக்கவும்தான் செய்யுது.  அதுவேணும் இதுவேணும்னு ஆசைப்படுற மனசு ஓடுன்னும் இருக்கிறதைக் கொண்டு வாழத் தெரிஞ்ச மனசு பொன்னுன்னும் தானே நினைக்கிறோம்?  அப்போ என்கிட்ட இருக்கிற ஓட்டு மனசு எனக்கு வேண்டாம், அதைவிட ஒசத்தியான பொன் மனசைத் தேடிப் போகப் போறேன்னு மனசு சொல்லுது.  அதையும் ஆசையைத் துறக்கப் போற துறவி மாதிரி வேஷம் போட்டுகிட்டுச் சொல்லுது.  அந்த வேஷத்தை நம்புற நாமதான் நித்யானந்தா பாவின்னு கூச்சலும் போட்டுக்கிறோம்.  ஓட்டையும் பொன்னையும் ஒன்னாப் பாக்குற மனசு வேணும்னா நித்யானந்தாவையும் கிருஷ்ண பரமாத்மாவையும் பக்கத்துத் தெரு பிச்சைக்காரனையும் கால்ல போடுற செருப்பையும் ஒரே அளவுல வச்சுப் பாக்கணுமா இல்லையா?

அதெல்லாம் கஷ்டம், சம்சார வாழ்க்கை வாழ்ந்து பழகின நம்ம மனசுக்கு அந்த மாதிரிப் பார்வையெல்லாம் வராதுங்கிறது ஒருபக்கம் இருக்கட்டும்.  எப்படியோ மூச்சைப் பிடிச்சு முத்துக்குளிச்ச மாதிரி அப்படிப்பட்ட மனசை நாம அடைஞ்சுட்டோம்னே வச்சுக்கிடுவோம்.  அதுக்கப்புறம் வீட்டுக்குள்ள பொண்டாட்டி நம்மளை விடுவாளா?  “பிள்ளைக்கு உடம்பு சுகமில்லை, ஆஸ்பத்திரிக்குப் போகப் பணம் வேணும்”னு சொல்ற பொம்பளை கிட்ட “நோயுற்ற உடம்பும் நோயற்ற உடம்பும் ஒன்றென்று காண் என் கண்ணே”னு சொல்லித்தான் பாருங்களேன்.  நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி நாலு கேக்க மாட்டா?

பஞ்ச காலத்துல, நாய் ஒன்னு சாப்பிட ஒன்னும் கிடைக்காம உடல் சோர்ந்து படுத்திருந்துச்சாம்.  பாவம் அதுக்கு நடந்தலைஞ்சு இரைதேடக் கூடத் திராணியில்லை.  அது பக்கத்துல எங்கேயிருந்தோ சிதறி விழுந்திருந்த சீனித் துண்டு ஒன்னை எடுத்துட்டுப் போக எப்படியோ மோப்பம் பிடிச்சு ஒரு எறும்பு வந்துச்சு.  பஞ்சகாலத்துல இரைக்கு அலைஞ்சுகிட்டு இருந்த எறும்பைப் பாத்து நாய்க்கு ஏதோ ஒரு பச்சாதாபம்.  இழக்குறதுக்கு ஒன்னும் இல்லைன்னா இரக்கப்படுறது சுலபம் தானே!  “ஊர்ல யாருக்குமே சாப்பாடு கிடைக்கலை.  நீ மட்டும் எதுக்கு வீணா அங்கயும் இங்கயும் லாந்திகிட்டு இருக்க?  பேசாம உன் புத்துக்குள்ள போய் இரு.  பஞ்சம் போன பிறகு எழுந்து நடமாடத் திராணி வேணும்னா பஞ்ச காலத்துல ஓய்வெடுக்கணும்”னு புத்தி சொல்லியிருக்கு நாய்.  அதுக்கு அந்த எறும்பு சொல்லுச்சாம், “பஞ்சமாவது ஒன்னாவது.  எல்லாம் இந்த மனுஷங்க மத்தவங்களை ஏமாத்துறதுக்கு சொல்ற கட்டுக்கதை.  என் புத்துக்குள்ள வந்து பாரு எவ்வளவு சாப்பாடு குமிஞ்சிருக்கு”னு.

இதே மாதிரி தான் பட்டினத்தார்கிட்ட கேட்டப்போ அவர் தனக்கு ஒத்து வந்ததை, தன் பார்வையில் பட்டதைச் சொல்லியிருக்கார்.  அவர் சொல்றதைக் கேட்டுப் பஞசமும் இல்லை பட்டினியும் இல்லைனு நாமளும் சொல்றதானா சொல்லிக்கலாம்.  ஆனா பசின்னு வரும்போது எந்த எறும்புப் புத்துக்குள்ள நாய்க்கு விருந்து போடுறாக?

கருத்துகள்

  1. "இருக்கிறதை வச்சுகிட்டு நிம்மதியா இருக்கப் பழகணும்னு" (சம்சாரி) இதுவும்
    "ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே" (துறவி) இதுவும் ஒன்றில்லையே?

    ஒரு சம்சாரிக்கு, பொன் கிடைத்தால் மகிழ்ச்சி, ஓடு கிடைத்தாலும் வருத்தம் தேவை இல்லை.

    அது என்ன ? "பக்கத்துத் தெரு பிச்சைக்காரனையும் "? :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாத்தையும் சமமாகப் பார்க்கிறதும் இருப்பதைக் கொண்டு நிம்மதியாய் இருப்பதும் அடிப்படையில் ஒன்று என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஓடும் பொன்னும் ஒன்று என்னும்போது ஓடிருப்பவன் பொன் தேடி அலைய மாட்டான்.

      நீக்கு
    2. அதெப்படி ஒன்றாக இருக்க முடியும்? எனக்கு தெரியவில்லை.
      வாழ்க்கையை வாழ்வதற்க்கும், சும்மா கழிப்பதற்கும் உள்ள வேறுப்பாடல்லவா அது?

      /*இருப்பதைக் கொண்டு நிம்மதியாய் இருப்பது*/
      தான் வாழவும், தன்னை சார்ந்து வாழும் மற்றும் தானாக பொருளீட்டும் திறன் இல்லாத ஒரு உயிரை காப்பாற்ற பொருள் தேடியாக வேண்டும்.இப்படி கிடைக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அதைக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வது.

      /*ஓடும் பொன்னும் ஒன்று என்னும்போது ஓடிருப்பவன் பொன் தேடி அலைய மாட்டான்*/
      அப்படிப்பட்டவனுக்கு கிடைப்பதெல்லாம் ஓடே :)
      பசியும், உணவும் ஒன்றே என்றால் எதற்க்கு உணவு தேட வேண்டும்? ஒரு வாரம் கூட உயிர் வாழ மாட்டான்!

      நீக்கு
    3. "உயிரை காப்பாற்ற பொருள் தேடியாக வேண்டும்."

      தேடித்தான் ஆக வேண்டுமென்று என்ன இருக்கிறது? ஊரில் கிட்டத்தட்ட எல்லோருமே பிழைப்புக்கு வழிதேடிக் கொள்கிறார்கள். அதனால் மட்டுமே பிழைப்பைத் தேடாமல் வெறுமனே இருப்பது என்றொன்று இல்லாமல் போய் விடாது.

      "பசியும், உணவும் ஒன்றே என்றால் எதற்க்கு உணவு தேட வேண்டும்?"

      அதே தான். உணவு தேடினாலும் தேடாவிட்டாலும், அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எல்லாம் ஒன்றுதான். பரிசு கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் ஒன்றுதான் என்று லாட்டரிச்சீட்டு வாங்குவது மாதிரி. (லாட்டரிச்சீட்டு வாங்குவதே பரிசுக்காகத்தான் என்றும் வாதிடலாம். ஒரே செயலுக்கு செய்பவர் மனநிலையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் வேறுவேறு காரணங்களிருக்கலாம். நாம் இருவரும் வேறுவேறு மனநிலை/காரணங்களை நினைத்துக் கொண்டால் நம்முடைய பார்வையும் வேறுவேறாகவே இருக்கும்.)

      நீக்கு
    4. /*ஒரே செயலுக்கு செய்பவர் மனநிலையைப் பொறுத்தும் சூழ்நிலையைப் பொறுத்தும் வேறுவேறு காரணங்களிருக்கலாம்*/

      உண்மை தான். என்னால் பசுவையும், பாம்பையும் ஒன்றாக பார்க்க முடியாது. ஆனால், இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ முடியும்.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்