பாண்டவர் பூமி

நான் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும்போது பாண்டவர் பூமி படம் வந்தது.  கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்.  என் அண்ணனுடைய நண்பர் ஒருவர் “அந்தப் படமெல்லாம் பார்ப்பியா நீ?” என்று நக்கலாகக் கேட்டது இன்னும் நினைவிலிருக்கிறது.

படம் முடிந்தபின் “அப்படியொன்றும் மோசமான படம் இல்லை” என்றுதான் தோன்றியது.  ஆனால் கொஞ்சம் நாள் ஆக ஆக அதிலிருந்த ஒரு விஷயம் மட்டும் மனதில் ஆழமாக நின்றுவிட்டது.  “ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களுக்கு தனிப்பட்ட நியாய தர்மங்கள் இருக்கும்.  பொதுவான நியாய தர்மங்களை ஒரு குடும்பத்துக்குள் கொண்டுவரக்கூடாது.  வெளிநபர்களால் ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட நியாயங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது” என்பதுதான் அது.  அந்தப்படத்தில் இப்போது நினைவிலிருப்பதும் அநேகமாக இந்த ஒரு விஷயம்தான்.

ஒரு ஆர்வத்தில் YouTube-ல் தேடிப்பிடித்து பாண்டவர் பூமியைப் பார்க்க ஆரம்பித்தேன்.  முதல் பத்து நிமிடம் தாண்டுவதற்குள்ளேயே இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கத்தான் வேண்டுமா என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது.  முன்பெல்லாம் கிட்டத்தட்ட சேரனின் எல்லாப் படங்களுமே பிடிக்கும்.  ஆட்டோகிராஃப், பாண்டவர் பூமி, தவமாய் தவமிருந்து, எல்லாம்.  முதல்முதலில் வெறுப்படைந்தது பொக்கிஷம் பார்த்து.  அதன் பிறகு சேரன் படம் எதுவும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.

ஒருகாலத்தில் பிடித்த பாண்டவர் பூமி இப்போது பிடிக்காமல் தாங்க முடியாமல் போனதில் ஆச்சர்யப்பட பெரிதாக ஒன்றும் இல்லை.  நாம் வளரவளர வாழ்க்கையின் மீதான நம் பார்வையும் மாறுகிறது.  15 வயதில் குடும்பத்திற்குள் இருக்கும் dynamics பற்றி அப்படிப் பச்சையாக எடுத்துச் சொன்னதால்தான் எனக்குப் புரிந்தது.  அந்த நாள்களில் பார்த்த நல்ல படங்கள் எதுவும் மண்டையில் ஏறவில்லை.  (குருதிப்புனல், மகாநதி, சிந்துபைரவி, ஹேராம் போன்றவை.  அவற்றை இப்போது பார்க்கையில் ‘அடேங்கப்பா’ போட வைக்கின்றன.)  அந்த வகையில் பார்த்தால் பாண்டவர் பூமியால் பயனடைந்தவர்கள், பயனடைபவர்கள் இருந்தார்கள், இருப்பார்கள்.

சினிமாவைப்பற்றிக் கருத்து சொல்வதில் எப்போதுமே கொஞ்சம் அதிகப்பிரசங்கியாகத்தான் இருந்திருக்கிறேன்.  ஆனால் எனக்குப் பிடித்த ஒரு படம் உண்மையில் கொஞ்சம் கொடூரமாக இருப்பது யோசிக்க வைக்கிறது.  அந்தப் படத்தாலும் நன்மை இருந்தது/இருக்கிறது என்று வாதிட வைக்கிறது.  என் மதிப்பீடு தவறாகப் போய்விடக்கூடாது என்பதாலா, இல்லை என் மதிப்பீடு தவறில்லை என்று நம்புவதாலா தெரியவில்லை.
**********
நம் ஊரில் வில்லனுக்கு மகளாக இருக்கும் கதாநாயகி எப்போதுமே அப்பாவை எதிர்த்து நாயகன் பக்கம் திரும்பி விடுவதையே படமாக்குகிறார்கள்.  உண்மையிலேயே நான் அப்படி ஒரு கதாநாயகி நிலையில் இருந்தால் என் அப்பா செய்வது சரியே (அல்லது தவறில்லை) என்றே வாதிடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.  அப்பாவின் பக்கமே இருந்துகொண்டு நாயகனுடனும் சேர்ந்துகொள்ள முடியாதா என்றுதான் எனக்குப் பார்க்கத் தோன்றும்.  என்னைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தைக்கூட தமிழ் சினிமாவில் பார்த்ததாகத் தோன்றவில்லை.  ரன் படத்தில் வரும் அந்த கால் முடமானவன் மாதிரி முகம்கூடத் தெரியாமல் ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருக்கலாம், ஆனால் கொஞ்சம் பெரிய கதாபாத்திரம் யாரும் இருந்ததாக நினைவில்லை.  (மணிரத்னம், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்கள் படங்களில் நிறைய நம்பத்தகுந்த பாத்திரங்களைப் பார்த்திருக்கிறேன்.  என்னை மாதிரி ஒரு பாத்திரம் இல்லையென்றுதான் சொல்கிறேனே தவிர நல்ல பாத்திரங்களே இல்லை என்றல்ல.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்