இடுகைகள்

இன்னமும் காணாமல் போகாதவர் பற்றிய அறிவிப்பு

ஐந்தடி நான்கு அங்குலம் நல்ல சிவப்பு மெலிந்த தேகம் அசட்டுத் தனமாய் சிரிக்கும் ஒரு புகைப்படம் கீழே முகவரியும் தொலைபேசி எண்ணும். "மணமகன் தேவை"க்கும் "காணவில்லை"க்கும் சிறிதளவு ஒற்றுமை வார்த்தையளவில் உண்டு. "போட்டோ பாத்தியா, பிடிச்சிருக்கா உனக்கு?" கேட்கும்போதுதான் தோன்றும், "காணவில்லை" எவ்வளவோ தேவலையோ என்று.

காதலியின் திருமணம்

அத்வைதியான சுண்டுவிரல் அழுகிறது மோதிரம் தனக்கன்றி மோதிரவிரலுக்குக் கிடைத்ததேயென்று.

நிலா மேலே தான் இருக்கிறது

நிலவில் இருக்கும் தோழிக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பேன், நிலா மேலேயும் பூமி கீழேயும் தான் இருக்கின்றன என்பதை!

வேற்று சாதிக்காரன்

புதியவனின் ஒவ்வொரு அசைவிலும் அவன் வேற்று சாதிக்காரன் என்பது தெரிந்தது. நாலைந்து இரவுகள் கழிந்தபின் கேட்டேன் ஏன் வினோதமாய் நடந்துகொள்கிறான் என்று. "உங்களைப் போல இருக்க முயல்கிறேன்" என்றான்.

மனம்

காய்ந்த எலும்பைக் கடிக்கும் நாய் ஒருகணமும் அவ்வெலும்பை விட்டகலாமல் தன் உயிர்போல் காப்பதைப் பார்த்திருக்கிறாயா? எலும்பைத் தின்ன முடியாதென்பது அந்த நாய் அறியாததா என்ன! அத்தனை நாடகமும் அடுத்தொரு கறித்துண்டு கிடைக்கும் வரை தான்.

இருமை

கணந்தோறும் நதி கரையையும் கரை நதியையும் மறு நிர்ணயம் செய்தவாறே உள்ளன. வற்றி மெலிந்து ஓடும் நதி கரையைத் தன்பால் இழுத்து இறுக்குகிறதா, இல்லை கரை நதியை அழுத்தி நெருக்கி ஒடுக்குகிறதா? காய்ந்து காணாமலாகும் நதி கரையையும் அழித்து தன்னையும் மாய்த்துக் கொள்கிறதா, இல்லை பெருகிக்கொண்டே போகும் கரை நதியை அழிப்பதால் தானும் அழிகிறதா? கரையில்லாத நதியொன்றிருப்பின் அதை நாம் நதியென்றுதான் அழைப்போமா?

தேய்பிறை

'சிலநாள் இன்பம் சிலநாள் துன்பம் என்பதாய் மனித வாழ்க்கை ஏனுள்ளது குருவே?' வானத்தை அண்ணாந்து பார்த்தார் குரு.  நிலவைப் பார்த்தவாறே சொன்னார்.  'முழு நிலவு எத்தனை அழகாய் இருக்கிறது!' 'ஆனால் நேற்றல்லவா பௌர்ணமி?' மனதில் நினைத்தாலும் நான் அதை வெளியில் சொல்லவில்லை. என் முகம் நோக்கி முறுவலித்த குரு சொன்னார் 'ஆம், நேற்றுத்தான் பௌர்ணமி.  சொல் இராகவா, பௌர்ணமி இரவு முழுவதும் முழு நிலவு தெரியுமென்றா நினைக்கிறாய்?  கொஞ்சம் கொஞ்சமாய் வளந்து வரும் நிலவு ஒரே ஒரு கணத்தில் முழுநிலவாய்க் காட்சியளித்துப் பின் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கவில்லை என்று எப்படித் தெரியும் உனக்கு?' 'அப்படியென்றால் இன்பம் துன்பம் என்பதெல்லாம் வெறும் காட்சி மயக்கங்கள் தானா?' 'ஆமென்று சொன்னால் நம்பி விடுவாயா?' இல்லையென்பது தான் பதில்.  ஆனால் மௌனமாய் தலை கவிழ்ந்தேன். 'வளர்வதெல்லாம் தேயுமென்றும் தேய்வதென்பதே மீண்டும் வளர்வதற்காகத்தான் என்றும் ஒரு சாரார் நம்புகிறார்கள்.' 'ஆனால் எந்நாளும் மாறாமல் இருக்கும் கதிரவனும் கடலும் மலைகளும் இருக்கும் பிரபஞ்சத்தில் தானே ...