உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வழக்கமாகத் தண்ணீர் குடிக்கும் ஏரிக்கு வந்தது அந்த யானை.  அங்கு ஏரி முழுவதுமாக உறைந்து குடிக்க முடியாமல் போயிருந்தது.  கடந்த சில வாரங்களாகவே அளவுக்கு மீறிக் குளிர்ந்திருந்த ஏரி இப்போது இல்லாமலே போனது யானைக்கு ஏமாற்றமாக இருந்தது.  தாகத்துடனேயே திரும்பிச் சென்றுவிட்டது.

சில மாதங்கள் கழித்து மீண்டும் அதே ஏரிக்கு யானை வந்தது.  அப்போதும் உறைந்தே இருந்த ஏரியிடம் யானை கேட்டது, “எல்லோருடைய தாகத்தையும் தீர்க்கும் புனிதமான பணி செய்யும் நீ இப்படி மாதக்கணக்கில் உறைந்து போகலாமா, இது நியாயம்தானா?” என்று.

ஏரி சொன்னது, “நியாயமா என்று என்னைக் கேட்கிறாயா நீ?  எத்தனையோ வருடங்கள் நான் நீராக இருந்து உன்போன்ற விலங்குகளின் தாகம் தீர்த்தேன்.  என்னுள் மீன்களும் பாம்புகளும் தவளைகளும் தாவரங்களுமாக எத்தனையோ உயிரினங்கள் வாழ வகை செய்து கொடுத்தேன்.  இந்தப் பாழாய்ப்போன காற்றுக்கு என்ன கோபமோ, என்னால் தாங்கமுடியாத அளவு குளிராக வீசி இப்படி என்னை உறைய வைத்துவிட்டது.  என் மேல்மட்டத்தில் பல அடி கனத்துக்கு நான் உறைந்ததால் உன்போன்ற விலங்குகளுக்கு உதவ முடியாமல் போனாலும், ஆழத்தில் நான் இன்னும் நீராகவே இருந்து என்னுள் வாழும் உயிர்களைக் காக்கின்றேன்.  நியாயமா என்று என்னைக் கேட்காதே, குளிர்ந்து வீசும் இந்தக் காற்றைக் கேள்.”

காற்றைக் கேட்பது கஷ்டமில்லை.  காற்றுதான் எல்லா இடத்திலுமே இருக்கிறதே.  அதே இடத்தில் நின்றவாறே யானை காற்றிடம் அது திடீரென இப்படிக் குளிர்ந்துபோனது நியாயமா என்று கேட்டது.  காற்று தன் தரப்பு நியாயத்தைச் சொல்ல ஆரம்பித்தது.  “ஒரு சிறிய இடத்தில் இருந்து வாழும் உங்களுக்கு என் நிலைமை புரிவது கஷ்டம்தான்.  பரந்த பூமியைச் சுற்றிலும் பல கிலோமீட்டர் உயரத்திற்குப் பரவியிருக்கிறது என் உடல்.  அப்படி பூமியைவிடவும் பெரிய உடல்கொண்ட என்னுடைய வெப்பத்தை எதெதெல்லாம் பாதிக்கும் என்பதை உங்களுக்குச் சொல்லி விளக்க முடியாது.  ஆனால் ஒன்றை மட்டும் மனத்தில் கொள்ளுங்கள்.  மற்ற எல்லாரையும் போலத்தான் நானும்.  என்னில் ஏற்படும் மாற்றங்களுக்கு நான் மட்டும் காரணம் இல்லை.  எப்படி இந்த ஏரி என்னால் உறைந்து போனதோ, அதுபோல என்னில் ஏற்படும் மாற்றங்களையும் வெளியிலிருந்து மற்றவர்களே தூண்டுகிறார்கள்.”

யானைக்கு இந்த பதில் ஆச்சரியம் அளிக்கவில்லை.  குற்றமென்று வருகையில் மற்றவரைக் கைகாட்டுவது இயல்புதானே.  யானை காற்றிடம் சொன்னது, “நீ சொல்வது நியாயமாகத்தான் இருக்கிறது.  உன்னை இப்படிக் குளிரவைத்தது யார் என்று சொல், நான் அவர்களிடம் சென்று கேட்கிறேன்.  மாதக்கணக்கில் இப்படி நீரை உறைய வைத்தால் மிருகங்கள் எப்படி வாழும்?  இதற்குக் காரணமானவர்களிடம் சென்று நான் அவர்கள் செய்யும் அநியாயத்தைச் சுட்டிக்காட்டப் போகிறேன்.”

காற்று கொஞ்ச நேரம் யோசித்து பதில் சொன்னது.  “இதை யார் ஆரம்பித்தார் என்று தேடிப் போக நீ நினைப்பதன் காரணம் புரிகிறது.  ஆனால் ஆரம்பித்தவர் மட்டுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று சொல்வது சரியாகுமா?”  காற்று சொல்ல வருவது யானைக்கு விளங்கவில்லை.  “நீ என்ன நினைக்கிறாய் என்று புரியவில்லை, கொஞ்சம் விளக்கமாகச் சொல்” என்று காற்றைக் கேட்டது.

“என்னைச் சுற்றி மாற்றம் நிகழும்போது நான் குளிர்கிறேன் என்றால் அதற்கு நான் காற்றாக இருப்பதும்தானே காரணம்?  உன்னையும் மற்ற விலங்குகளையும் இந்த ஏரியையும் செடிகொடிகளையும் ஒரே அளவில்தானே நான் குளிர வைக்கிறேன்.  ஆனாலும் இந்த ஏரி மட்டும்தானே உறைகிறது... நீங்கள் உறையாமல்தானே இருக்கிறீர்கள்?”

இதைக் கேட்டதும் ஏரிக்குக் கோபம் வந்தது.  “அப்படியானால் உறைந்தது என் குற்றம் என்கிறாயா?” என்று கேட்டது.  “இல்லை, நான் அப்படிச் சொல்லவில்லை.  குளிரில் உறைவது உன்னுடைய குணம்.  உலகத்தைக் குளிரூட்டுவதும் வெப்பமூட்டுவதும் என் குணம்.  ஒருவேளை நான் இப்படிக் குளிராமலேயே இருந்திருந்தால் உனக்கு உறையும் குணம் உண்டு என்பதே உனக்குத் தெரிந்திருக்காதல்லவா?  உன்னைப் பற்றி நீயே அறிந்துகொள்ள நான் ஒருவகையில் காரணமாய் இருந்தேன் என்று நான் சொன்னால் அதுவும் சரிதானே?”

யானைக்கு அந்த நியாயம் புரிந்தது.  நடப்பது ஒவ்வொன்றுக்கும் பல காரணங்கள் இருக்கும் என்று தெரிந்தாலும் தன்னுடைய இப்போதைய துன்பத்துக்கு யார் பொறுப்பு என்று அதற்கு விளங்கவில்லை.  காற்றிடம் கேட்கலாமா என்று யோசித்தது.  ஆனால் காற்றும்தான் என்ன சொல்லும், நீரில்லாமல் இருக்க முடியாது என்பது உன் குணம், ஆகவே உனக்கும் இதில் பொறுப்பு உள்ளது என்று சொல்லும்.  யார் காரணம் என்று யோசிப்பதைவிட வேறு எங்காவது தண்ணீர் கிடைக்குமா என்று பார்ப்பது உத்தமம் என்று முடிவு செய்த யானை ஏரிக்கும் காற்றுக்கும் நன்றி சொல்லி விடைபெற்றது.

கருத்துகள்

 1. Nice story, how true, instead of complaining we should move on and find another productive thing to do. Good job Muthu Kannan.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Thank you, Chris Veerabadran! I have been trying to follow this principle for a while now; only today I could articulate it well.

   நீக்கு
 2. இதனால் நீங்கள் சொல்ல வருவது என்ன?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 'பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.' --பம்மல் K சம்பந்தம்.

   நீக்கு
 3. அதான் என்ன அனுபவிக்கனும்ன்னு கேட்கிறேன் .... நீங்கள் சொல்ல வர்றதுகொஞ்சம் புரியலை. யானைக்கு காற்று விளக்கம் சொன்னது போல எனக்கு நீங்கள் விளக்கம் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதைகள், புதிர்கள் எல்லாமே ஒரு மனப்பயிற்சிக்காக. நமக்குள் சிந்தனையைத் தூண்டுவதற்காக. சில கதைகளைப் படிக்கையில் நமக்கு ஒன்றும் தோன்றாது. ஒன்றும் தோன்றவில்லையென்றால் பரவாயில்லை... கதையை மறந்துவிட்டு வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடலாம்.

   வேறு சில கதைகளைப் படித்தால் அந்தக் கதையில் வரும் பாத்திரங்களை நமக்கு விமர்சிக்கத் தோன்றும்: அவர் நல்லவர், இவர் செய்தது சரியில்லை, இந்த ஒரு விஷயத்தை இவர் செய்ததால் உயர்ந்தவரானார், இந்த மாதிரி. அந்த விமர்சனங்கள் நமக்கு நாமே செய்துகொள்பவை. அந்த விமர்சனங்கள் நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும் என்று நம்மை முடிவு செய்ய வைப்பவை.

   காற்று சொன்னது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதா? யானை சும்மா நகராமல் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? யானை மீதோ காற்று மீதோ ஏரி மீதோ உங்களுக்கு மரியாதையோ கோபமோ இரக்கமோ வருகிறதா? யானை போலவோ ஏரி போலவோ காற்று போலவோ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்கிறீர்களா? அப்படி நடப்பது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதா?

   கதை என்பது கண்ணாடி மாதிரி. அதில் நமக்குத் தெரிவதெல்லாம் நாம் மட்டுமே. இலக்கியம் என்பது நம்மை நாமே அறிந்துகொள்ள உதவும் கருவி. இதுதான் என்னுடைய கருத்து.

   நீக்கு
 4. யானை போலவோ ஏரி போலவோ காற்று போலவோ நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்கிறீர்களா? அப்படி நடப்பது சரியென்று உங்களுக்குத் தோன்றுகிறதா? - இது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

  நீங்கள் இதில் எதுவாக இருக்கீர்கள் என்று யோசித்தீர்களா. ஏன் கேட்கிறேன் என்றால். இதை எழுதியதே தாங்கள் தானே. அப்போ, உங்களுக்கும் இதில் ஏதோ ஒரு கதா பாத்திரம் இருந்தாக வேண்டும். இதில், தாங்கள் என்னவோ...... அதை நான் அறிந்து கொள்ளலாமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுதுவது என்பது பொதுவாக எனக்குள் நானே செய்துகொள்ளும் விவாதம். ஏரியின் இடத்திலிருந்து முதலில் யோசிக்க ஆரம்பித்தேன். பின் காற்று சொல்வது மனதில் தோன்றியது. கதையில் ஏரி, யானை, காற்று எல்லாமே நான்தான் :)

   நீக்கு
 5. நீங்கள் எப்போதும் எழுதி விடுகிறீர்கள். நான் எப்போதும் இதுபோல் யோசிப்பது என்னவோ உண்மை தான். இப்போது தான் இதுபோல் பிளாக்கர் எல்லாம் எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

  நானும் உங்களைப்போல் தான் எல்லா இடத்திலும் என்னை வைத்து யோசித்தேன். எனக்கும் ஏரி, யானை, காற்று எல்லாம் நான் தான் எனத் தோன்றுகிறது.

  எனக்காக இவ்வளவு விளக்கம் தாங்கள் தந்ததற்க்கு மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்