தாத்தா

சின்னப் பையனாய் இருக்கும் போது என் கண்ணில் எப்போதுமே முதலாகப் பட்டது என் தாத்தாவுக்கு என்னை விட என் அண்ணன் மேல் பிரியம் அதிகம் என்பதுதான்.  அவருக்குப் புத்தகங்கள் என்றால் பிடிக்கும்.  பாட்டு, நாடகங்களும் கூட.  அவருக்குக் கதைகள் படித்துக் காட்ட வேண்டியது என்னுடைய ஒரு வேலை.

நேற்று வாசித்த ஜெயமோகனுடைய அறம் கதையில் வரும் "லச்சுமி வருவா போவா… சரஸ்வதி ஏழு சென்மம் பாத்துத்தான் கண்ணுபாப்பான்னு சொல்லுவாங்க" என்ற வரி மனதில் நின்று யோசிக்க வைத்துக்கொண்டே இருந்தது.  என் தாத்தா பல புத்தகங்கள் வைத்திருந்தார்.  பலவற்றை வீட்டில் யாரும் படிப்பதேயில்லை.  நான் படிக்க முயன்ற சில புத்தகங்கள் எனக்கு சுவாரசியமாய் இல்லை என்பதை விட எனக்குப் புரியவில்லை என்பதே சரியாக இருக்கும்.  என் அப்பாவுக்கு படிப்பதில் ஆர்வம் கொஞ்சம் உண்டு என்றாலும் என் தாத்தாவைப் போல் புத்தகங்கள் எதுவும் அவர் சேர்த்து வைக்கவில்லை.

எனக்கு 18 வயது இருக்கும் போது என் தாத்தா இறந்தார்.  அந்த சமயத்தில் அவருக்கு வயதாகி உடல் நலமும் சரியில்லாமல் இருந்ததால் முன்பு மாதிரி அவரிடம் என்னால் நெருக்கமாய் இருக்க முடியவில்லை.  அவரைத் தவிர்த்தேன் என்று கூட சொல்லலாம்.  குழந்தை வயதிலிருந்தே அவருக்கு என்னைப் பிடிக்காது என்று நான் விலகியிருந்த காரணமாய்க் கூட இருக்கலாம்.  ஆனால் இப்போது, இதையெல்லாம் யோசித்துப் பார்க்கையில் தான், அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள எனக்கு எத்தனையோ இருந்திருக்கின்றன ஆனால் எதையுமே நான் கற்றுக் கொள்ளவில்லை என்று புரிகிறது.

என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் கற்றுக் கொடுப்பதில் பெரிய வித்தியாசம் உண்டு.  என் அப்பா சொல்வது எதுவும் எனக்குப் புரியாமல் இருந்ததில்லை.  நேரடியாக, தெளிவாகப் பேசும் மொழி என் அப்பாவினுடையது.  ஆனால் தாத்தா அப்படி இல்லை.  ஒரு வார்த்தையில் அவர் சொல்வதை நான் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தாரோ என்னவோ.  அவர் சில முறை எனக்கு சில விஷயங்கள் சொல்லிக் கொடுக்க முயற்சித்து நான் ஒன்றும் புரியாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டது நினைவிருக்கிறது.  என் அண்ணன் அப்படியல்ல, அவனுக்கு இந்த விஷயங்கள் எளிதாகவே புரிந்தன.  ஒருவேளை அதனால் கூட அவனை என் தாத்தாவுக்கு அதிகமாய்ப் பிடித்ததோ என்னவோ.

அவருக்கு தான் செய்வது சரி என்ற அதீத நம்பிக்கை உண்டு.  அறிந்ததால் ஏற்படும் கர்வம் என்று கூட சொல்லலாம்.  அவரைப் போல் துணிவுடன் பேசுவது, முடிவெடுப்பதையெல்லாம் நான் வேறெந்த சொந்தக்காரரிடமும் பார்த்ததில்லை.  அவர் வாழ்ந்த வாழ்க்கையும் அப்படி.  பல தொழில்கள் செய்தார்.  அண்ணன் தம்பிகளுக்குக் கொஞ்ச காலம் உதவியாய் இருந்தார்.  காமராஜரை அவருக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்காது.  பழைய காலத்திற்கு மீண்டும் சென்று திடகாத்திரமாக இருந்த என் தாத்தாவிடம் பேச வேண்டும் போல இருக்கிறது.  அவர் வாழ்க்கையை எப்படிப் பார்த்தார், நாங்கள் எப்படி வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டுமென நினைத்திருந்தார் என்றெல்லாம் கேட்க வேண்டும்.

"இளமையில் புரியாது முதுமையில் முடியாது" என்ற வரிகளுக்கு இதுதான் அர்த்தம் போல!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்