நெற்றிக்கண்

விசு படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அதிலும் குறிப்பாக எஸ்வி சேகர், கிஷ்மு எல்லாம் இருந்து விட்டால் சொல்லவே வேண்டாம்.  விசு படத்தில் முக்கியமான கதாபாத்திரங்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எப்போதுமே அதிரடியாகத் தான் சொல்வார்கள்.  அதிகமான நாடகத்தன்மை இருக்கும் -- அந்த நாடகத் தன்மைக்காகவே அந்தப் படங்களை நான் ரசித்திருக்கிறேன்.*  பிடிக்கும் என்றாலும் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி வாழ்க்கையைப் பற்றி அவர் படங்கள் என்னை பாதித்ததில்லை.

நெற்றிக்கண்.  பார்க்க ஆரம்பிக்கையில் பாலச்சந்தர் படம் என்று தான் நினைத்தேன்.  (பட ஆரம்பத்தில் யார் பெயரையும் கவனிக்கவில்லை.)  பாலச்சந்தர் படம் மாதிரி இல்லாததால் கொஞ்சம் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.  பாலச்சந்தருடைய பாணி இதுவல்ல.  விசுவைப் போல "குற்றம் புரிந்தவனுக்குத் தண்டனை" என்ற மேம்போக்கான நியாயம் பேசும் படங்கள் பாலச்சந்தருடையவை அல்ல.  பாலச்சந்தர் படங்களில் "கெட்டவர்கள்" யாரும் கிடையாது.  ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நியாயம், அந்த நியாயங்களைச் சுற்றி நகரும் கதையில் நல்லவரோ கெட்டவரோ இருப்பதில்லை.

நெற்றிக்கண் படம் முடிந்த பின் சக்கரவர்த்தியின் மேல் அனுதாபம் வரலாம், கோபம் வரலாம், அருவெறுப்பு வரலாம், ஆனால் மரியாதை வராது.  சிந்து பைரவி ஜேகேபி மேல்?  உங்களுக்கு எப்படியோ, எனக்கு அவர் மேல் பயங்கரமான மரியாதை இருக்கிறது.  மற்றவர் படமாய் இருந்தால் ஜேகேபி தவறு செய்தவராய் மாற்றப் பட்டிருப்பார்.  ஆனால் பாலச்சந்தர் படம் என்பதால் அவர் கஷ்டப்படுகிறவர்.  தன்னுடைய பிரச்சனையை, தன்னை ஆதரிக்கும் குடும்பம் தன்னால் படும் துயரத்தை, அவர்கள் தண்டிக்காமலேயே உணர்ந்து, யோசித்து முடிவெடுத்து மாற்றம் கண்டவர் அவர்.  வாழ்க்கையில் நான் அவரைப் போல இருக்க ஆசைப் படுகிறேனேயன்றி நெற்றிக்கண் சக்கரவர்த்தி போலவோ முக்கியமாக சக்கரவர்த்தியின் மகன் சந்தோஷ் போலவோ அல்ல.  (படத்தில் சந்தோஷ் நடத்துவது கீழ்த்தரமான அராஜகம்.)

நெற்றிக்கண்ணில் எனக்குப் பிடித்த வசனங்கள்:
  • ஒரு மனுஷனோட பலகீனத்தைக் குத்திக் காட்டுறது ஒழுக்கம் இல்லை.
  • முருகன் பேசுவானான்னு கேட்கக் கூடாது.  மருதமலை முருகன் என்கிட்ட பேசினான்.
  • ஏன் மருதமலை பாக்காதது ஒரு குத்தமா?

---------------
* ஷங்கர் படத்திலும் அதே மாதிரி நாடகத் தன்மையைக் கொண்டு வர முயற்சிக்கிறார்.  ஆனால் ஷங்கரது காட்சிகளெல்லாம் கொஞ்சமும் படைப்பூக்கமில்லாமல் இருப்பதால் என்னால் ரசிக்க முடிவதில்லை.  அந்நியன் படத்தில் ஒரே ஒரு வசனம் நன்றாக இருந்தது.  அம்பி தற்கொலை முயற்சி செய்வதற்காக தண்ணீரில் குதிக்கிறார்.  அதோடு காட்சி மாறுகிறது.  அடுத்த காட்சியில் அம்பி உயிரோடு இருக்கிறார்.  அவரே விளக்கமும் கொடுப்பார்: "தற்கொலை பண்ணிக்கிறது சட்டப்படி தப்பு, அதனால நானே எந்திரிச்சு வந்துட்டேன்."

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’