செவ்வாய், 28 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு

காதலா காதலா மாதிரியான கமல் படங்களைப் பார்த்தவர்களுக்கு மன்மதன் அம்பு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தாத படம் தான்.  காதலா காதலா போன்ற படங்களை ரசித்தவர்கள் மன்மதன் அம்பையும் ரசிப்பதற்கு நிறையவே வாய்ப்பிருக்கிறது.  புரிந்துகொள்ள அவகாசம் கொடுக்காமல் வரிக்கு வரி நகைச்சுவையாக இருக்கும் வழக்கமான் கமல் படம்.  எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.  இன்னும் ஒருமுறை கூட பார்க்கும் அளவுக்குப் பிடித்திருக்கிறது :-)

படத்தில் எனக்குப் பிடித்திருந்த இன்னொரு விஷயம் சின்னச் சின்ன விஷயங்களில் லாஜிக் சரியாக இருந்தது.  உறவுகளில் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள், பெரிய விஷயங்களில் பொய் சொல்பவர்களை நாம் எளிதில் மன்னிப்போம், ஆனால் சின்னச் சின்னப் பொய் சொல்பவர்களை நம்மால் மன்னிக்க முடியாது.  அதே மாதிரி, முக்கியக் கதை கொஞ்சம் கிழிஞ்ச துணி மாதிரி இருந்தால் கூட சின்னச் சின்ன விஷயங்கள் சரியாய் இருந்ததால் எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.  ஒரு உதாரணம்.  ஒரு கார் விபத்தில் கார் ஓட்டிக்கொண்டிருந்த ஆண் சின்ன அடியுடன் பிழைத்துக் கொள்கிறான், ஆனால் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் செத்துப் போகிறாள்.  அதெப்படி சாத்தியம் என்று கேட்பவர்களுக்காகவே நடந்ததைக் காட்டுகிறார்கள்.  அந்தப் பெண் தனது சீட் பெல்ட்டைக் கழற்றி விட்டு தனது கணவனை முத்தமிடுகிறாள்.  அதே நேரத்தில் விபத்தும் நிகழ்ந்து விடுகிறது.  எப்படி லாஜிக்?  (நம்ம ஷங்கரை யாராவது இதையெல்லாம் நோட் பண்ண சொல்லுங்கப்பா! ;-)

தங்கர் பச்சான், சீமான் படங்கள் மாதிரி எல்லாம் இல்லாமல் நிஜமாகவும் இயல்பாகவும் இந்தப் படத்தில் நல்ல தமிழ் பேசுகிறார்கள்.  என்னைக் கேட்டால் இந்த மாதிரி படங்கள் தான் தமிழை வாழ வைக்க முடியுமே தவிர காது கிழியப் போடுகிற கூச்சல்கள் அல்ல.

நீலவானம் பாடல் படமாக்கப் பட்ட விதம் அட்டகாசம்.  பாடல் முடிந்ததும் திரையரங்கில் சிலபேர் கைதட்டுகிற அளவுக்கு பிரமாதமாய் இருந்தது.  படம் பார்த்தால் அந்தப் பாட்டை மிஸ் பண்ணாமல் பாருங்கள்.