சரியா தவறா

என்னை நானே பல முறை கேட்டுக் கொண்ட கேள்வி இது: "இவ்விரண்டில் எதைச் செய்வது சரி?"  கணந்தோறும் நாம் முடிவெடுக்கிறோம், தேர்வு செய்கிறோம்.  எதைச் சாப்பிடுவது, எங்கு போவது, யாருடன் பேசுவது, எதைச் சொல்வது, எதை சொல்லாமல் விடுவது என்று எத்தனையோ விஷயங்களைப் பற்றி யோசித்தோ யோசிக்காமலோ நாம் முடிவெடுக்கிறோம்.

சில முடிவுகளை நிறைய யோசித்தே எடுப்போம், அவை "முக்கியமானவை" என்பதால்.  என்ன படிப்பது, எந்த நிறுவனத்தில் வேலை செய்வது, யாரை மணம் செய்து கொள்வது, என்பது போன்றவை.  இது மாதிரி யோசித்து முடிவு செய்பவையே நமது கொள்கைகள் மற்றும் வாழ்க்கை வழிமுறைகள்.

சுகி சிவத்தின் பகவத் கீதை பற்றிய சொற்பொழிவு ஒன்றைக் கேட்டுக் கொண்டே இன்று அலுவலகம் வந்தேன்.  பகவத் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்கையில் கண்ணன் கர்மபலனைத் துறக்கும் யோகத்தைப் பற்றியும் கர்மத்தையே துறக்கும் யோகம் பற்றியும் உபதேசம் செய்கிறார்.  அர்ஜுனன் கேட்கிறான், இந்த இரண்டில் எது சரி, எதனைப் பின்பற்ற வேண்டும் என்று.  அவ்விரண்டுமே சரியான பாதைகளே என்று கண்ணன் பதில் சொல்கிறார்.

இதைச் சொல்லி விட்டு சுகி சிவம் சொல்கிறார்: நமக்கு எப்போதுமே ஒரு பயம்.  நாம் சரியான பாதையையே பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறோம்.  சரியான பாதையில் போவது பாதுகாப்பு என்று நினைக்கிறோம்.  இதில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் மற்றவர் சரி என்று சொல்வதை நாம் வெறுமனே ஏற்றுக் கொள்கிறோம்.  குரு சொல்கிறார் என்பதனாலோ, தகப்பனார் பின்பற்றுகிறார் என்பதனாலோ ஒரு பாதை சரியானதாயும் மற்றது தவறானதாயும் ஆகி விடுமா என்ன?

நேரடி அனுபவத்தின் மூலமே எந்தப் பாதை சரி எந்தப் பாதை தவறு என்பது தெரிய வரும்.  இது தான் இன்று நான் கற்றுக் கொண்டது.  பரீட்சித்துப் பார்த்து எனக்கு எது சரி என்பதைக் கண்டறிய வேண்டுமேயன்றி எழுதி வைத்திருக்கும் விதிகளை குருட்டுத் தனமாய் ஏற்றுக் கொள்ளக் கூடாது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

ஆயிரங்காலப்பயிர்