சுக துக்கே, சமே



கீர்த்திவாசனின்
இந்தப்பதிவுக்கு இது பதில். முதலில் அதைப் படிச்சிருங்க.


டாக்டர் ஊசி போடுகிறார். பயங்கரமாய் வலிக்கிறது.

ஒரு வயதுக் குழந்தை என்ன செய்யும்? அழும். அழுவது துன்பத்திலிருந்து தப்பிக்க ஏற்கெனவே குழந்தைக்கு உதவியிருப்பதால், இந்த வலியிலிருந்து தப்பவும் குழந்தை அழுகிறது.

நமக்கு ஊசி போடுகையில் நாம் என்ன செய்வோம்? இந்த வலி நிரந்தரமல்ல என்று நமக்குத் தெரியும். "ரொம்ப வலிக்குதாங்க?" என்று மனைவி கேட்டால் "ஆம்" என்றுதான் சொல்வோம். நமக்கும் தெரியும், மனைவிக்கும் தெரியும், டாக்டருக்கும் தெரியும், சில நிமிடங்களில் வலி மறைந்துவிடும் என்று.

இந்த அணுகுமுறை பொருந்தும் என்று நினைக்கிறேன். "துன்பம் நேர்கையில் துன்பப்படலாம், புலம்பலாம், பிதற்றலாம், அழலாம். ஆனால் அந்தத் துன்பம் (மற்ற இன்பத்தைப் போலவே) நிரந்தரம் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள்" என்று பரமாத்மா சொல்லியிருக்கலாம்.

"நல்ல விஷயத்துக்காக அனுபவிக்கிற தற்காலிகத் துன்பம்" பற்றி நான் சொல்வதாகத் தவறாக நினைக்க வேண்டாம். நான் சொல்வதற்கும் நல்லது-கெட்டதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒரு திருடன் உங்களைக் காயப்படுத்திவிட்டு உங்கள் பணத்தைக் கொள்ளையடித்திருக்கலாம். உங்களை நாய் கடித்திருக்கலாம். உங்கள் கவனக்குறைவால் செய்த தவறுக்கு ஆபிஸில் மேலதிகாரியிடம் பதில் சொல்ல நேர்ந்திருக்கலாம். பல ஆயிரம் கொடுத்து வாங்கிய உங்கள் செல்போன் தொலைந்திருக்கலாம். இதற்கெல்லாம் நீங்கள் கவலைப்படலாம் -- ஆனால் கவலைப்படும் அந்த நேரத்திலேயே உங்களுக்குத் தெரியும் -- நடந்ததில் உங்கள் பிழை ஏதுமில்லை. அல்லது, நீங்கள் வேண்டுமென்றே கவனக்குறைவாய் இருந்ததால் அந்த சம்பவம் நடக்கவில்லை. உங்களால் முடிந்த அளவு சிறப்பாகத்தான் எதையும் எப்போதும் செய்கிறீர்கள்.

துன்பமோ இன்பமோ -- இது நிகழ்ந்ததற்கு நானும் காரணம் என்ற என்ற நினைப்பு நிம்மதியை அழிக்கும். தென்றல் காற்றை எந்த உறுத்தலுமின்றி அனுபவிப்பது போல் வாழ்க்கையையும் அனுபவிப்பதே சரி என்று தோன்றுகிறது.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

ஆயிரங்காலப்பயிர்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்