சர்கார்

பொதுவாக அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் நான் பார்ப்பதில்லை. மனைவிக்கு விஜய் பிடிக்கும் என்பதால் சர்கார் படம் பார்க்கப் போயிருந்தேன்.

படம் பார்க்கும் போது தோன்றிய விஷயம். தமிழ்ப் படங்களில், அதிலும் முக்கியமாக பெரு நடிகர்கள் நடிக்கும் படங்களில், வில்லன் முட்டாளாகத் தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. சர்கார் படமும் அந்த விதிக்கு உட்பட்டே இருக்கிறது.

முப்பது வருடங்களுக்கு மேல் பலரையும் ஏமாற்றி ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டியெழுப்பிய வில்லன் நாயகனிடம் பேசும் ஒவ்வொரு முறையும் அநியாயத்துக்கு நேர்மையாக இருக்கிறார். இராமன் வேடமணிந்ததுமே இராவணனுக்கு அடுத்தவர் மனைவி மேல் ஆசை போய்விட்டது என்று ஒரு கதை சொல்வார்கள். அது போல நாயகன் முன் நிற்கும் போதெல்லாம் வில்லன் வாக்குமூலம் கொடுக்கிறார்.

இராதா ரவி சவால் விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் காட்சிகளும் கொஞ்சம் கூட யதார்த்தம் இல்லாதவை.

இந்தப் படத்தை ஒரு ‘கலைப்படைப்பு’ என்ற கண்ணோட்டத்தில் மதிப்பிட்டால் இப்படிப் பல குறைகள் சொல்லலாம். ஆனால் இது ஒரு கலைப் படைப்பல்ல. இது ஒரு பிரச்சாரப் படம். ஏ ஆர் முருகதாஸின் மற்ற படங்களைப் போலவே மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் இது. ஒரு பிரச்சாரப் படம் என்ற அளவில் இது நல்ல படம் என்று தான் தோன்றுகிறது.

ஒரு திரைப்பட இயக்குநர் என்ற அளவில் முருகதாஸ் மேல், அதாவது அவர் எடுக்கும் படங்களின் மேல், எனக்கு பெரிய மரியாதை இல்லை. ஆனால் ஒரு குடிமகன் என்ற அளவில், நாட்டில் நல்ல மாற்றம் வர வேண்டும் என்று முயற்சி எடுக்கும் அந்த மனிதர் மேல் எனக்கு மரியாதை வருகிறது.

இந்தப் படங்களால் மட்டும் முன்னேற்றம் வந்து விடுமா? வராமல் போகலாம். ஆனால் முன்னேற்றத்தைக் கொண்டுவர தன்னால் ஆனதைச் செய்யும் மனிதருக்கு என்‌ வணக்கங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்