அதீத ஒத்திகை (overrehearsal)

இயற்கையிலே சிலருக்கு உணர்திறன் அதிகம். இவர்களை Highly Sensitive Persons என்று அழைக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன் எனக்கு இது தெரிய வந்ததிலிருந்து இது பற்றிக் கற்று வருகிறேன். நானும் ஒரு அதியுணர் நபர் (highly sensitive person-கு எனக்குத் தெரிந்த தமிழ்; இதை விட நல்ல மொழிபெயர்ப்பு இருந்தால் சொல்லுங்கள்). இந்த அதியுணர் திறனால் எனக்கு வரும் பிரச்சனைகளைத் தீர்ப்பது பற்றி ஆரம்பத்தில் கற்று வந்தேன். இப்போது அதியுணர் குழந்தைகளை (highly sensitive children) எப்படி வளர்ப்பது என்பதைக் கொஞ்சம் கொஞ்சம் கற்று வருகிறேன்.

The Highly Sensitive Child புத்தகத்தில் வந்த அறிவுரை இது. உங்களுடைய அதியுணர் குழந்தை புதிய சூழ்நிலைகளில் மற்ற குழந்தைகளைப் போல் செயல்பட முடியாமல் போகலாம். போதுமான திறமை இருந்த போதிலும், புதிய சூழலால் திணறிப்போகும் அதியுணர் குழந்தைகளுக்கு செயல்படும் ஆற்றல் குறைந்து போகிறது. புதிய சூழலின் ஆதிக்கத்தை நம்மால் குறைக்க முடியாது, ஆனால் செய்ய வேண்டிய செயலை நம் அதியுணர் குழந்தை கண்ணை மூடிக்கொண்டு செய்யக்கூடிய அளவுக்கு ஒத்திகை பார்த்தால் மற்ற குழந்தைகள் அளவுக்கு நம் குழந்தைகளும் செயல்பட முடியும் அல்லவா? “உங்கள் குழந்தை செய்ய வேண்டியதை மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்த்து – overrehearse செய்து – தயார் படுத்துங்கள்” என்பதே அந்த அறிவுரை.

நேற்றிலிருந்து இது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. ஏனென்றால் என்னுடைய வாழ்க்கையிலும் இது தான் எனக்கு இப்போதைய பிரச்சனை. இத்தனை ஆண்டுகள் வேலையில் எனக்கிருந்த பொறுப்புகள் மாறி, அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னுடைய அணியில் உள்ள மற்றவர்களுடன் பேசுவது, அணிக்கான பொது முடிவுகள் எடுப்பது போன்றவையும் என்னுடைய புதிய பொறுப்புகளில் அடக்கம். இவற்றைச் செய்ய நான் திணறுகிறேன் என்பது என்னை நன்றாகத் தெரிந்தவர்களுக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்காது.

இந்த சிக்கலைத் தாண்டிப்போக என்ன வழி? என் மனதில் இருக்கும் திட்டம் இது தான்:
  • என்னுடைய சிக்கல் இது என்று ஏற்றுக் கொள்வது. அணியில் அத்தனை பேருக்கும் தலைவனாக நடந்து கொள்வது, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வது ஆகியவை எனக்கு அசௌகரியமாக உள்ளன என்பதை அங்கீகரிப்பது முதல் படி.
  • ஓரிரு நாள்கள் நான் இந்த சவால் பெரிதாகத் தோன்றாதவாறு செயல்பட்டிருக்கிறேன். அந்த நாள்களில் நான் வேலையைத் தொடங்கும் முன்பே அந்த நாளில் வரக்கூடிய நெருக்கடியான தருணங்களைப் பற்றி சிந்தித்து அவற்றுக்குத் தயாரானேன். உதாரணம்: வாராவாரம் நடக்கும் team meeting — அனைவரிடமும் அவர்களது வேலையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல். முதலிலேயே யோசித்து அதற்கு மனதளவில் தயாராகும் போது என்னால் ஓரளவு எளிதாக அவற்றைச் செய்ய முடிகிறது.
  • தினமும் இப்படி overrehearse செய்து தயார் செய்துகொள்ள அதிகப்படியான நேரம் தேவை என்பதை ஒத்துக்கொள்வது. இதில் நான் நேரம் செலவழிப்பதால் மற்ற வேலைகள் செய்ய எனக்கு நேரம் குறைவாகவே கிடைக்கும். வேலை குறைவாக செய்வதால் என் மேல் நானே அதிருப்தி அடையக் கூடாது.
  • சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். கொஞ்ச நாளிலேயே இந்த வேலைகள் எனக்குப் பழகி விடும். என்னுடைய அதியுணர் மனமும் அமைதியுடனேயே இந்த வேலைகளைப் பார்க்கும். அப்போது நான் முன்பு அளவுக்கு தினமும் வேலை பார்க்கத் தொடங்கி விடுவேன். எனவே வேலைத்திறன் குறைவது தற்காலிகப் பிரச்சனை தான்.
திட்டம் போடுவது எளிது; செயல்படுத்துவது கடினம். இந்தத் திட்டத்தை என்னால் செயல்படுத்த முடிகிறதா, செயல்படுத்தினாலும் நான் எதிர்பார்க்கும் பயன் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

ஆயிரங்காலப்பயிர்