புகைப்படக் கலை

கலை மனித மனத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது என்று சிறு வயதில் படித்ததுண்டு. இலக்கியம் மனித மனத்தை விரிவுபடுத்துகிறது என்பதை அனுபவத்தில் கண்டிருந்தாலும், மற்ற கலைகளால் மனம் எப்படி மேம்படுகிறது என்பது எனக்கு விளங்காமலேதான் இருந்து வந்தது.

*****

முதன்முதலில் நான் அமெரிக்கா வந்தது 2006-ல். இந்தியாவை விட்டு வெளியே முதல் முதலாகக் கால் வைத்ததும் அப்போதுதான். அமெரிக்காவில் குறைந்த விலையில் கிடைக்கும் பொருள்கள் ஏதாவது வாங்கலாம் என்று தோன்றியபோது வாங்கியதுதான் என்னுடைய முதல் கேமரா. கேமரா என்றால் என்ன, எது நல்ல கேமரா, எதுவுமே தெரியாமல் குறைந்த விலை என்பதால் மட்டுமே வாங்கிய கேமரா அது. அவ்வப்போது நல்ல படங்கள் எடுக்க முயற்சி செய்தேன் என்றாலும், புகைப்படக் கலையில் அப்படியொன்றும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.

சென்ற ஆண்டுத் தொடக்கத்தில்தான் ஒரு SLR கேமரா வாங்கினேன். SLR வாங்கியது, அதற்கு முன் நான் வைத்திருந்த கேமராவைவிட SLR கேமரா தெளிவான படங்கள் எடுக்கும் என்ற காரணத்தினால்தான். ஆனாலும் மற்றவர்கள் எடுக்கும் கலை நேர்த்தியுடைய படங்களைப் பார்க்கும்போது நாமும் இப்படிப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வருவதுண்டு. ஆரம்பத்தில் என்னுடைய SLR கேமராவில் எடுத்த படங்கள் என்னை ஓரளவுக்குப் பெருமைப்பட வைத்தாலும் நாள் ஆக ஆக எனது படங்களில் நேர்த்தி இல்லாமலிருப்பது உறுத்த ஆரம்பித்தது.


தல்ஸ்தோயின் அன்னா கரீனினா நாவலில் ஓரிடத்தில் ஒரு வாக்கியம் வரும்: I cannot paint a Christ that is not in my heart. தன் மனதில் இல்லாத கதையை எழுத்தாளன் எழுதிவிட முடியாது. தன் மனதில் இல்லாத உருவத்தை ஓவியன் வரைந்துவிட முடியாது. தன் மனதில் இல்லாத அழகை புகைப்படம் எடுப்பவன் தன் கேமராவில் பதிவு செய்துவிட முடியாது.

என் படங்களில் ஏன் அழகில்லையென்றால், என் கண் முன்னே என்னால் அழகைக் காண முடியவில்லை என்பதால்தான். கண்ணுக்கு அழகு தெரிந்துவிட்டால் அதைக் கேமராவில் பதிவு செய்வது அத்தனை கடினமில்லை. கண்ணுக்குத் தெரியும் அழகைப் பதிவு செய்ய ஒருவனுக்குத் திறமை வேண்டும்தான், ஆனால் திறமை பயிற்சியால் வாய்க்கும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம். ஆனால் கண் முன்னே அழகைக் காண்பது மனம் விரிந்தால் மட்டுமே முடியும்.

மனம் விரிந்து தன்னைச் சுற்றிலும் அழகைக் காண்பவன் மகிழ்ச்சியடைகிறான். மகிழ்ச்சி கொண்ட மனது அழகிய புகைப்படங்கள் எடுக்கிறது. மனதை விரிவுபடுத்தி மனிதனை மகிழ்ச்சிகொள்ளச் செய்வதே கலையின் நோக்கம். கலைஞனின் தேடலும் அதுவே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’