வண்டித்தடம்

பள்ளிக்கூட நாள்களில் முழங்கால் போடுவது ஒரு பொதுவான தண்டனை.  மணல் தரையில் கூட முழங்கால் போடச் சொல்வார்கள்.  மைதானத்தில் வகுப்பு இருந்தால் மைதானத்து மணல் தரையில்தானே முழங்கால் போட முடியும்!  வகுப்பில் என்னால் பேசாமல் இருக்க முடியாது.  அதனால் பலமுறை தண்டிக்கப் பட்டிருக்கிறேன்.  தாமதமாக வருவது, வீட்டுப் பாடம் முடிக்காதது என்று பல விதங்களிலும் தண்டனை பெற்றிருப்பதால் முழங்கால் போடுவதெல்லாம் அப்போது எனக்கு ரொம்ப சாதாரணம்.

முழங்கால் போட எப்போதும் துணை இருக்கும்.  எந்தத் தவறாயினும் நம்முடன் சேர்ந்து ஒரு ஐந்தாறு பேரும் செய்திருப்பார்கள்.  "எப்பா... காலு வலிக்கி(து)" என்று பையன்கள் இடையிடையே உட்கார்வதோ நிற்பதோ உண்டு.  அப்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும், உண்மையிலேயே இவர்களுக்குக் கால் வலிக்கிறதா இல்லை சும்மா அப்படிச் செய்கிறார்களா என்று.  நேர்மையாக இருக்க வேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு அப்போதே இருந்தது.  அதனால் தண்டனையில் ஏமாற்றுவது எனக்குப் பிடிக்காது.  எனக்குக் கால் வலித்ததும் இல்லை.

சில வருடங்களுக்கு முன் கால் உடைந்து சரியாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் ஒரு நாள் டாக்டர் சொன்னார்: "காயம் ஆறினாலும் உடைவதற்கு முன்பு இருந்த மாதிரி இந்தக் கால் எப்போதும் ஆகாது" என்று.  அவர் சொல்வது என்னவென்று அப்போது புரியவில்லை.  இப்போது, ஏதேனும் காரணத்துக்காக ஹோட்டல் அறையின் கம்பள விரிப்பில் (carpet) முழங்கால் போடும் போது தான் புரிகிறது.  ஒரு காலத்தில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் முழங்கால் போட முடிந்த என்னால் இப்போது இரண்டு நொடி கூட முழங்கால் போட முடியாது.

மழை பெய்து முடித்து சகதி காயும் முதல் நாளில் சின்னதும் பெரியதுமாய் ஏகப்பட்ட வண்டித் தடங்கள் இருக்கும்.  நம் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு சிறிய பெரிய சம்பவமும் தெருவில் வண்டி போவது போல.  நேரத்திற்கேற்றாற்போல சிறியதும் பெரியதுமாய் தடம் பதித்துச் செல்கின்றன.  சில தடங்கள் அடுத்த நிமிடம் அழிந்து போகின்றன.  சில தடங்கள் தேய்ந்தழிய நேரம் பிடிக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

உறைந்த ஏரியும் தாகம் கொண்ட யானையும்

ஆயிரங்காலப்பயிர்