காட்டுமலர்

முதல் முதலில் அவளைப் பார்க்கையில் "அழகாய் இருக்கிறாள்" என்று தோன்றியதே தவிர வேறொன்றும் பெரிதாய்த் தோன்றவில்லை. அவள் அழகு தான், ஆனாலும் முதல் பார்வையிலேயே மனதில் ஒட்டிக்கொண்டு நீங்க மறுக்கும் பேரழகில்லை. அப்போது அப்படித்தான் தோன்றியது.

நாட்கள் செல்லச் செல்ல அவளோடு நேரம் செலவழிக்கத் தொடங்கினேன். அவள் மேலும் மேலும் அழகாகத் தெரிந்தாள். இரவு தூங்குமுன்பும் காலையில் அரைத்தூக்கக் கனவிலும் அவளையே நினைத்துக் கிடந்தேன். அந்த முகம், அந்த சிரிப்பு, அவளது குரல் -- எல்லாமே என்னை ஒரு மயக்கத்தில் வைத்திருந்தன. எல்லா வழிகளையும் பயன்படுத்தி அவளை பார்க்கவும் பேசவும் செய்தேன்.

நெருங்க நெருங்கத்தான் தூரம் தெரியும். ரொம்பவும் நெருங்கினால் எதுவுமே தெரியாது. அவளைப் பற்றி எனக்குப் புரியப்புரிய மனம் கசப்பே அடைந்தது. அவள் செல்லும் பாதை என் பாதையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. எனக்கும் அவளுக்கும் எதுவுமே பொதுவாக இல்லை. ஆனாலும் நானிருந்த மனநிலையில் எதையும் சட்டை செய்வதாயில்லை என் மனம். கனவிலேயே வாழ்ந்தேன்.

எப்பேர்ப்பட்ட கனவாயிருந்தாலும் விழித்தே ஆக வேண்டுமல்லவா? நிஜம் வெயிலாய் மனதை சுட்டதில் கொஞ்சம் கொஞ்சமாய் கனவு கலைய ஆரம்பித்தது. இரத்தத்தில் வெள்ளையணுக்கள் போல மனதிலும் தற்காப்புக்காக ஒரு பகுதி இருக்குமோ என்னவோ. மனதின் ஒரு பகுதி தீவிரமாக என்னுடன் வாதித்துக்கொண்டே இருந்தது, என் கனவை நம்பிவிட வேண்டாமென. "பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி" என்றும் "இந்தப் பதர்களையே நெல்லாமென எண்ணி இருப்பேனோ" என்றும் மனம் புலம்பிக்கொண்டே இருந்தது.

நாலைந்து நாள்களிலேயே அவளுடன் நன்கு உரையாடும், உடனிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. மனமெங்கும் நிறைந்தவளை கண் முழுதும் நிறைத்தவாறே மகிழ்ந்திருந்தேன். அவளது ஆளுமை ஒரு புதிய ஒளியில் தெரிந்தது. நான் இதுவரை பார்த்த பழகிய எவரையுமே அவள் ஒத்திருக்கவில்லை. அவள் பூக்கடைக்குள் பூத்த காட்டுமலர் மாதிரி. அத்தனை பரிசுத்தம், அத்தனை அந்நியம், அத்தனை வசீகரம். காட்டுமலரை என் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டுபோய் விடலாம் என நினைத்த என்னைப் பார்த்து எனக்கே பரிகசிக்கத் தோன்றியது. அவளைப் பதரென்று நினைத்த என்மேல் எனக்கே கோபம் தோன்றியது.

என் வாழ்வில் என்றும் அவளை என்னால் மறக்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுக்காக அவ்வப்போது இன்னமும் ஏங்கும் புத்திகெட்ட மனது எப்போது அமைதியடையும் என்று தெரியவில்லை. இந்த உறவின் பெயர் காதலா இல்லை வேறெதுவுமா என்றும் தெரியவில்லை. ஆனாலும் இவள்மேல் நான் கொண்டிருப்பது கடவுளின் மடியில் தலைசாய்த்துக் கொள்ளத் துடிக்கும் பக்தனின் ஆசையிலிருந்து மாறுபட்டதில்லை என்றே தோன்றுகிறது.

கருத்துகள்

  1. இந்த உணர்வு எனக்கும் இருந்தது.....இருக்குது....உங்களோட இந்த படைப்ப படிக்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கு.........

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்