செவ்வாய், 20 மே, 2008

உபபாண்டவம்

நான் மூன்று அல்லது நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த சமயம். எங்கள் வகுப்பில் யாரேனும் புதிய சினிமா ஏதேனும் பார்த்திருந்தால் அடுத்த நாளே எல்லா நண்பர்களுக்கும் "கதை சொல்வார்கள்". கதை சொல்வது என்பது முதல் சீனிலிருந்து கடைசி சீன் வரை அத்தனையையும் படத்தில் பார்த்த மாதிரியே விவரிப்பது. எனக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும், எப்படி இத்தனை விஷயத்தை ஞாபகத்தில் வைத்து கோர்வையாகச் சொல்கிறார்கள் என்று.

அவர்கள் சொல்லும் கதைகளிலெல்லாம் கிட்டத்தட்ட எல்லா சண்டைகளுமே "நல்லவனுக்கும் கெட்டவனுக்கும்" இடையில் நடப்பவையே.
கெட்டவனோட ஆட்கள், ரஜினியோட அப்பா கடையில வந்து லஞ்சம் கேட்பாங்க. அவர் இல்லைனு சொன்னதும் கடையில உள்ளதை எல்லாம் உடைப்பாங்க. அவர் நடுவில வந்து கெஞ்சும்போது, அதுல ஒருத்தன் ஓங்கி கன்னத்துல அடிப்பான். ரஜினியோட அப்பா ரோட்டில போய் விழுந்திருவாரு. அவர் விழுந்த இடத்துல ஒரு காலை மட்டும் காட்டுவாங்க. அவன் அவரைத் தூக்கி விட்டுட்டு ரௌடிங்க கூட சண்டை போட்டு அவரைக் காப்பாத்துவான். ஆனா நிஜத்துல அவனும் கெட்டவன் தான். இருந்தாலும் இந்த ஒரு தடவை மட்டும் அவன் கெட்டவங்களோடயே சண்டை போடுவான்.
இப்படித்தான் சண்டைகள் விளக்கப்படும். இதில் முக்கியமாக நான் இப்போது கவனம் செலுத்தும் விஷயம், மனிதர்களை நல்லவன் கெட்டவன் எனப்பிரிப்பது, மற்றும் நல்லவனும் கெட்டவனும் போடும் சண்டையில் நல்லவன் ஜெயிப்பதாகக் காட்டுவதை உண்மை என்றே நம்பி விடுவது. இவை எந்த அளவுக்கு நம் மனதில் ஊறியுள்ளன என்பது எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம் நாவலைப் படிக்கையில் எனக்கு அப்பட்டமாகத் தெரிகிறது.

பொதுவாக நம் ஊரில் சொல்லப்படும் மகாபாரதக் கதை இதுதான்: "பாண்டவர்கள் நல்லவர்கள், கௌரவர்கள் கெட்டவர்கள். பல நேரங்களில் பல விதங்களில் கௌரவர்கள் பாண்டவர்களை அழிக்க முயன்றனர். சில நேரங்களில் அவர்கள் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றனர். ஆனால் இறுதியில் கௌரவர்களை அழித்து பாண்டவர் வென்றனர். தர்மம் நிலைநாட்டப்பட்டது."

உபபாண்டவத்தில் மகாபாரதம் என்ற இலக்கியம் திரிக்கப்படாமலும் அளவுக்கதிகமாய் எளிமைப்படுத்தப் படாமலும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு இலக்கியமுமே வாழ்க்கையை அதன் முழு பரிமாணத்தில் பார்த்து அதை ஆய்ந்து அறிய முற்படுகிறதேயொழிய எதையும் நிலைநாட்ட முயல்வதில்லை. பாண்டவர்களொன்றும் முழு யோக்கியர்கள் இல்லை. அவர்களது சுயநலத்திற்காக (குருக்ஷேத்திரப் போருக்கு முன்பே) அவர்கள் பலியிட்ட உயிர்கள் ஏராளம். அவர்களது பரம்பரையில் எந்தப் பெண்ணுமே நிம்மதியாய் இருந்தது இல்லை. குந்தி, பாஞ்சாலி இருவருமே வனவிலங்குபோல் மூர்க்கமானவர்கள். ஏகலைவன் கட்டை விரலை இழந்தது அர்ஜுனன் அவன் மேல் கொண்ட பொறாமையால். சகுனி குருக்ஷேத்திரப் போரின் சூத்திரதாரியாக இருந்த வில்லன் அல்ல. இதுபோல இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் நம்மிடம் பொதுவாக சொல்லப்படுவதில்லை.

உபபாண்டவம் மகாபாரதத்தைப் போலவே வாழ்க்கையை அதன் பிரம்மாண்டம் மாறாமல் படம்பிடித்துக் காட்டுகிறது. அதில் வரும் பாத்திரங்களை எல்லாம் நாம் இப்போதும் நிஜ வாழ்க்கையில் காணலாம். அதைப் படித்ததால் என்ன புரிந்துகொண்டேன் என்று எனக்கு வார்த்தையில் சொல்லத் தெரியவில்லை. "வாழ்க்கையைப் பற்றி மிக அதிகமாய் எழுதியவன் வியாசன். வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் எழுதி அவனிடம் கையெழுத்து வாங்க வேண்டுமென்றால் வாழ்க்கையைப் பற்றி முடிவாக எதுவும் சொல்லிவிட முடியாது என்றுதான் அவனிடம் எழுதி வாங்க முடியும்" என்று எங்கோ ஜெயமோகன் எழுதியது தான் நினைவுக்கு வருகிறது.

(உபபாண்டவம் நாவலை எனி இந்தியன் வெப் சைட்டில் வாங்கலாம்.)