மூன்றாம் காதல்

"Being The One is like being in love. No one can tell you you're in love. You just know it."

என் முதல் காதலை நான் கண்டுகொண்ட தருணம் இன்னும் நினைவிலிருக்கிறது. பாயில் புரண்டு புரண்டு படுத்து, தூக்கம் பிடிக்காமல் அவளையே நினைத்து மனம் புலம்பிக் கொண்டிருந்த பொழுதுகள். காதல் தோல்வி என்று அதை அழைக்கப் பிடிக்காமல் "ஏற்கப்படாத காதல்" என்ற பெயரை அதற்குச் சூட்டிக்கொண்டு கைக்கிளைத் திணைப் பாடல்களை படித்துப் பார்க்கலாமா என்று திரிந்த நாட்கள் பல. அவள் பெயரையே சொல்லிப் புலம்பி அப்படியே தூங்கிப்போன நாட்கள் பல. அந்த கனத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுத அந்த ஓர் இரவு இன்னமும் நினைவிலிருக்கிறது.

கண்மூடித் திறக்கும் முன் இரண்டாம் காதலில் விழுந்து விட்டிருந்தேன். இரண்டு பேரையுமே உயிர் உருக நினைக்கும் கணங்கள் வாய்த்தன. அப்போது [சிந்து பைரவி] ஜே.கே.பி சிந்துவின் மேலும் பைரவியின் மேலும் ஒரே நேரத்தில் காதல் வயப்பட்டிருந்தது ஒரு புதிய ஒளியில் தெரிந்தது. என்னுடைய இரண்டு காதலுமே ஏற்கப்படாமல் போனது மனதில் ஆறாத காயம் ஏற்படுத்தின என்பது உண்மைதான். ஆனால் காயங்களெல்லாமே தீங்கானவை அல்ல என்பது அதைவிடவும் உண்மை.

அதன் பின்னர் வேறு ஊருக்கு வந்தேன். புதிய ஊர், புதிய கம்பெனி, புதிய மக்கள். வாழ்க்கையில் கவலைப்பட பல விஷயங்கள் புதிதாக வந்தன. அந்த இரண்டு பெண்களையும் நினைத்துக் கொள்ளாத நாளில்லை, ஆனாலும் தூக்கம் தொலைக்கும் அளவுக்கு அவை தீவிர உணர்ச்சிகளாகவும் இல்லை.

ஒரு பைக் பயணத்தில் ஒரு அருவியினருகில் அமர்ந்து வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும்போது எதற்காகவோ அங்கு வந்த அவள் என்னிடம் கேட்டாள்: "You are a Tamilian, right?" அவள் என்னிடம் பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. "Yes. Why?" என்றேன் நான். "So am I" என்று கூறிவிட்டு மீண்டும் தன் நண்பர் குழுவுடன் சென்று இணைந்துகொண்டாள். அவ்வப்போது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினேன் அவளோடு. அந்தப் பயணம் முடிந்து மறுநாள் ஆபிஸில் தற்செயலாக மீண்டும் அவளைப் பார்க்க நேர்ந்தது. சம்பிரதாயமாக ஹலோ சொல்லி புன்னகைத்துக் கொண்டோம். அந்த இரவில் தான் தெரிந்தது, நான் அவள் மேலும் காதல் வயப்பட்டிருப்பது.

இன்னுமொரு முறை இது வேண்டாம் என்று தான் தோன்றியது. பழைய காயங்களும் கண்ணீரும் நினைவுக்கு வந்து பயமுறுத்தியது. இரண்டாம் நாள் காலையில் விழித்தெழும்போது கவிதைபோல என்னவோ தோன்றியது. எழுதி வைத்துக்கொண்டேன். தற்செயலாக அவளைப் பார்க்க வேண்டும் என்று ரகசியமாக ஆசைப்படும் மனம் அவளைக் கண்ட மறுகணம் பீதியடைவதும் தனக்குள் ஒளிந்து கொள்வதும் வியப்பாகவும் சிரிப்பாகவும் இருந்தது. திடீரென ஒருநாள் இந்தக் காதலை முழுமையாக வாழ்வது என்று முடிவெடுத்தேன். அவள் நினைவு வரும்போதெல்லாம் எல்லாவற்றையும் விலக்கி வைத்து அவள் பெயரிலும் மனதிலிருந்த அவள் பிம்பத்திலும் மூழ்கித் திளைத்தேன்.

தா னாக வந்த காதல் தானாகவே போய்விடும் என்றும் இந்தக் காதலை முழுக்க முழுக்க வாழ்ந்தால் அது சீக்கிரம் நடக்கும் என்றும் நம்பினேன். என் நண்பர்கள் பலரிடம் நான் காதல் வயப்பட்டிருப்பதையும் அதை நான் நடத்தும் விதத்தையும் கூறினேன். அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன். "உன் மேல் எனக்குக் காதல்" என்று சொல்வதன் அர்த்தம் எனக்கு உன்னை அளவுக்கதிகமாகப் பிடித்திருக்கிறது என்பது மட்டுமே என்று பலரும் புரிந்து கொள்வதில்லை. கல்யாணம் பற்றி யோசிப்பது, பதிலுக்குக் காதல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது, நான் உன் மனதைப் புண்படுத்தி விட்டேனோ என்று குழம்புவது என்று தேவையில்லாமல் பலர் கவலைப்படுவதால் இனிமேல் யாரிடமும் அவசியம் ஏற்படாமல் காதலைச் சொல்வது இல்லை என்று முடிவெடுத்தேன்.

ஓஷோ சொன்ன இவ்வரிகள் என் மனதில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தியவை: Life is another name of love, and love is nothing but being sensitive beauty. என் வாழ்க்கையும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. என் மனதில் வாழும் எல்லாப் பெண்களுக்கும் என் நன்றி. என் வாழ்க்கையை நான் படித்துக்கொள்ள உங்களையறியாமல் நீங்கள் உதவியிருக்கிறீர்கள். உங்களையும் உங்கள் உதவியையும் என்றென்றும் நினைத்திருப்பேன்.

பி.கு. அந்த மூன்றாவது பெண்ணுக்கும் எனக்கும் எந்த விதமான நட்போ பழக்கமோ இல்லை. ஒருவேளை அவளோடு பழக நேர்ந்தால் என் காதலை சொன்னாலும் சொல்வேன். விதியெங்கே விளையும் அது யாருக்குத் தெரியும் என்ற பாடல் வரிதான் மனதில் தோன்றுகிறது :-)

பி.பி.கு. பிப்ரவரி 20-ம் தேதியுடன் காதல் ரசம் வழியும் கிறுக்கல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டன அல்லவா? அதோடு என் மூன்றாம் காதல் மட்டுப்பட்டதென்று அறிக.

கருத்துகள்

 1. குசேலா..தமிழ்மணம்னு ஒண்ணு இருக்கு.. அங்கன உங்க ப்ளாக்கை சேர்த்துடுங்க.. ஏகப்பட்ட வியூவர்ஸ் வருவானுங்க..

  பதிலளிநீக்கு
 2. thamizmanam.com

  என் பேரு பூக்குட்டி.

  பதிலளிநீக்கு
 3. தகவலுக்கு நன்றி பூக்குட்டி. http://www.tamilmanam.com/ எல்லா பக்கமுமே "UNDER CONSTRUCTION"னு சொல்லுது. ஒருவேளை அட்ரஸ் தப்போ?

  பதிலளிநீக்கு
 4. நடப்பது நடக்கட்டும் என்று உங்களுடைய காதலை சொல்லிருக்கலாம்

  பதிலளிநீக்கு
 5. /* அவளிடம் என் காதலை வெளிப்படுத்துவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன். "உன் மேல் எனக்குக் காதல்" என்று சொல்வதன் அர்த்தம் எனக்கு உன்னை அளவுக்கதிகமாகப் பிடித்திருக்கிறது என்பது மட்டுமே என்று பலரும் புரிந்து கொள்வதில்லை. கல்யாணம் பற்றி யோசிப்பது, பதிலுக்குக் காதல் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகக் கற்பனை செய்து கொள்வது, நான் உன் மனதைப் புண்படுத்தி விட்டேனோ என்று குழம்புவது என்று தேவையில்லாமல் பலர் கவலைப்படுவதால் இனிமேல் யாரிடமும் அவசியம் ஏற்படாமல் காதலைச் சொல்வது இல்லை என்று முடிவெடுத்தேன். */

  அற்புதமான நிதர்சனமான வரிகள். உண்மையில் நம் சூழலில் ‘உன்னை பிடித்திருக்கிறது’ I like you என்று கூட சொல்லமுடியாதது துரதிர்ஷ்டம்

  பதிலளிநீக்கு
 6. Super :)

  எல்லா பெண்களுக்கும் நன்றி என்று நீங்கள் சொன்னது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்களை போல் எதனை பேர் இப்படி விஷயங்களை புரிந்து கொண்டிருக்க முடியும். அப்படி வாழ்க்கையை புரிந்திருக்க போய் தான் உங்களால் இப்படி ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பிளாஸ்டிக் குடும்பம்

வைரமுத்துவின் ‘பாற்கடல்’

ஆயிரங்காலப்பயிர்