திங்கள், 16 ஜனவரி, 2012

சார்பு

ஒரு கொடியில் வளரும் புழு அக்கொடியின் இலைகளையே தின்று உயிர் வளர்க்கிறது.  அந்தக் கொடிக்கோ அருகிலுள்ள மரத்தின் மேல் படராவிடில் வாழ்க்கையில்லை.  கொடியைச் சுமந்து கொண்டிருக்கும் மரம் மட்டுமென்ன, மண் இல்லாமல் நின்று விடுமா, இல்லை மழை இல்லாமல் வளர்ந்திடுமா?  எல்லாரையும் தாங்கி நிற்கும் பூமி சூரியனும் நிலவும் இல்லாமல் இருந்திடுமா?

நடுக்கும் குளிரையும் எரிக்கும் வெயிலையும் நனைக்கும் மழையையும் நன்றியுடன் பார்க்க முடிந்தால் பார்ப்போம்.  அதன்றி வெறுப்புதான் நமக்கு வருமென்றால் அனைத்தையும் வெறுப்புடனே பார்ப்போம்.  குடியா முழுகி விடும்?  அப்படியே குடி முழுகிப் போனாலும் தான் என்ன?

வெள்ளி, 16 டிசம்பர், 2011

தெய்வம் விட்டுப் போவதில்லே

தர்மதுரை ஆணென்ன பெண்ணென்ன பாடலில் வரும் வரி இது: “தேடும் பணம் ஓடிவிடும் தெய்வம் விட்டுப் போவதில்லே”.  கேட்க நன்றாகவே இருந்தாலும், குறை காணா விட்டால் நமக்குத் தூக்கம் வருவதில்லை.
-----

ஒருவர் தனக்குத் தெரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.  “கையில கிடைக்கிற பணத்தை எல்லாம் உடனே தங்கமா மாத்திருவேன் நான்.  கிராம் 240 ரூபாய் விக்கும் போது வாங்க ஆரம்பிச்சேன்.  அப்போவே அடேயப்பா இந்த விலையா தங்கம்னு மலைப்பா தான் இருந்துச்சு.  இப்ப விக்கிற விலையை அந்தக் காலம் யாரும் நெனச்சுக்கூட பாக்கலை.”

அடுத்தவர் சொன்னார்.  “நான் நிலமாத்தான் வாங்கிப் போடுறது.  முதல் சேர்த்து வாங்குறது கொஞ்சம் கஷ்டம், ஆனா காலாகாலத்துக்கும் நம்ம பேர்ல இருக்கும்.  அழுகிப்போற சமாச்சாரமா...  தங்கம் கூட உங்களுக்கு நகையில போடப்போட மதிப்பு குறையும், ஆனா நிலம் எப்படிப் போனாலும் மதிப்பு ஏறிக்கிட்டேதான் போகுமே தவிர இறங்காது.”

“நானும் கொஞ்சம் நிலம் வாங்குனேன், ஆனா தங்கம்னா வாங்குறதும் ஈஸி, சின்ன மதிப்புல கொஞ்சம் புரட்டுறதுக்கு எடுக்குறதும் ஈஸி.  பத்திரம், வில்லங்கம், அந்த மண்டையடியே வேண்டாம்னு ஒதுங்கிட்டேன்.”
-----

இந்த ரெண்டு பேரோட வாதத்துக்கும் பணத்தை விட சாமி தான் எப்பவுமே கூட இருக்கும்னு அந்தப் பாட்டுல சொல்ற வாதத்துக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

ஞாயிறு, 20 நவம்பர், 2011

தவறு

பூக்காத பூக்களுக்காக
மன்னிப்புக் கேட்பதில்லை
மரங்கள்.

சனி, 19 நவம்பர், 2011

அதிகாலை எண்ணங்கள்

வெற்றிடம் பற்றிப் படித்திருக்கிறீர்களா?  இங்க் ஃபில்லரால் மை ஊற்ற முடிவது வெற்றிடத்தால் தான்.  இங்க் ஃபில்லரை நாம் விரலால் அழுத்தும் போது அதன் உள்ளே உள்ள காற்று வெளியேறுகிறது.  நம் விரலை ஃபில்லரில் இருந்து எடுத்து அழுத்தத்தை நீக்கும் போது ஃபில்லருக்குள் காற்று கூட இல்லாத வெற்றிடம் உருவாகிறது.  வெற்றிடத்திற்கு ஒரு பண்பு உண்டு — அதன் அருகில் இருப்பது எதுவானாலும் விசையுடன் தன்னோடு ஈர்த்துக்கொள்ளும்.  இங்க் ஃபில்லரின் துவாரம் மைக்குள் மூழ்கி இருப்பதால் ஃபில்லர் மையை தன்னுள் இழுக்கிறது.  இது தான் புட்டிக்குள் இருக்கும் மை ஃபில்லருக்குள் ஏறக் காரணம்.  இதே அடிப்படையில் தான் அடி பம்பு, தண்ணீர் மோட்டார் எல்லாமே இயங்குகிறது.
==========

ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?  உங்கள் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றுகின்றன?  ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு என்று வைரமுத்து எழுதியிருக்கிறார்... அது உண்மைதான்.  காலையில் எழுந்ததும் சில கணங்கள் உங்கள் மனதில் எண்ணங்கள் ஏதும் தீவிரமாக இருப்பதில்லை.  முந்தைய தினம் நடந்த சம்பவங்கள், இன்று செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டவை, என்பன போன்றவற்றை நினைவில் கொண்டு வந்ததும் தான் அந்த நாள் தொடங்குகிறது.

அந்தக் காலை நேர கணங்களில் உங்கள் மனதுள்ளும் வெற்றிடம் தான் இருக்கிறது.  அந்த வெற்றிடம் தன்னை நிரப்பிக்கொள்ள எண்ணங்களைத் தீவிரமாகத் தேடுகிறது.  அந்த நேரத்தில் நீங்கள் உள்ளிழுத்துக் கொள்ளும் எண்ணங்கள் உங்கள் நாளையே தீர்மானிக்கின்றன.  இதைப் புரிந்து கொண்டதால் தான் நம் ஊரில் பெரியவர்கள் காலையில் குளித்து கடவுளைத் தொழுமுன் எதையும் செய்யாதே என்று சொன்னார்கள்.  ‘காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’ என்று பாரதியார் சொன்னார்.

காலையில் கடவுளைத்தான் சிந்திக்க வேண்டுமென்றில்லை.  உங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் சிந்திக்கலாம்.  இந்த கணம் முக்கியமானது என்ற பிரக்ஞை இல்லாமல் அற்பத்தனமான விஷயங்களையும் சிந்திக்கலாம்.  அதனால் ஏற்படும் விளைவுகள் நம்மைப் பாதிக்கும், அவ்வளவு தான்.

கடவுள் என்பது அபயம் தருவது, நம்மைக் காத்து நிற்பது, நம்மை நாம் விரும்பும் நிலைகளுக்கு வழிநடத்துவது என்று நம்புபவனுக்கு காலையில் கடவுளை நினைப்பதைப் போல நன்மை பயப்பது ஒன்றுமே இல்லை.  காலை எழுந்ததும் கடவளிடம் பயங்களை ஒப்புவித்த ஒருவனால் நாள் முழுவதும் மனபாரமின்றி தன் தொழிலைச் செய்ய முடியும்.  அதை விடப் பெரிய நிம்மதி வேறென்ன இருக்க முடியும்!

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் காலையில் நினைத்துக் கொள்வது இதுதான் என்று எதையாவது தேர்வு செய்து அதைப் பின்பற்றலாம்.  ஒவ்வொரு மாதம் ஒவ்வொன்றை நினைத்து நாளைத் தொடங்கி எது அதிக அமைதி தருகிறது என்று சோதித்தும் பார்க்கலாம்.

வெள்ளி, 11 நவம்பர், 2011

ஏணி

உண்மை என்னும்
உயரம் ஏறப்
பொய்யே ஏணி.

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

தலைகீழ் ராட்டினம்

நேற்று முன்தினம் மதியம் முழுவதும் சிட்னியில் இருக்கும் லூனா பார்க்கில் வெட்டியாய்ச் சுற்றித் திரிந்தோம்.  கம்பெனியில் இருந்து இலவசமாகக் கூட்டிச் சென்றிருந்தார்கள்.  பல விதமான ராட்டினங்கள்... நன்றாகத்தான் இருந்தது.  அதில் என்னை ரொம்ப ஆச்சர்யப்பட வைத்தது கீழிணைக்கப்பட்டிருக்கும் இந்த ராட்டினம் தான்.


உள்ளே உட்கார்ந்த நிலையில் நாம் இருக்கையில் ராட்டினம் நம்மை 360° சுற்றுகிறது. சும்மா நேரே உட்கார்ந்திருக்கும்போது நாம் எங்கிருக்கிறோம், தரை எங்கிருக்கிறது என்று தெரிகிறது.  கீழிருந்து மேலே ஏறும்போதும் மேலிருந்து கீழே இறங்கும்போதும் நாம் எங்கிருக்கிறோம், தரை எங்கிருக்கிறது என்று தெரிகிறது.  அதே போல் நாம் மேலே போய்க் கொண்டிருக்கிறோமா அல்லது கீழே இறங்கிக் கொண்டிருக்கிறோமா என்பதும் தெளிவாகத் தெரிகிறது.  ஆனால் எந்த நேரத்தில் நாம் உச்சியில் ஏறி பின் கீழிறங்கத் தொடங்குகிறோம் என்பது தெரியவே இல்லை.  ஏழெட்டு தடவை முயன்று பார்த்தேன், ஆனால் தெரியவேயில்லை.

ராட்டினம் சுற்றுவதை தள்ளி நின்று முதலில் பார்க்காமல் ஏறி உட்காரும் ஒருவரால் ராட்டினம் என்ன செய்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.  இப்படித்தான் ராட்டினம் செல்கிறதென்று ஊகிக்கலாம், ஆனால் உறுதியாகச் சொல்லிவிட முடியாது.  ஓடும் ரயிலில் படுத்துத் தூங்குகையில் பாதியில் விழித்துப் பார்த்தவர்களுக்குத் தெரியும் -- ரயில் எந்தத் திசையில் போகிறது என்பதை உறுதியாகச் சொல்லவே முடியாது.  ஜன்னல் வழியே வெளியே பார்த்தால்தான் தெரியும்.

அப்படியானால் நம்முடைய மூளையால் நம் உடல் நேரே இருக்கிறதா இல்லை தலைகீழாக இருக்கிறதா என்பதைச் சொல்ல முடியாது.  கண்களால் நம்மைச் சுற்றியுள்ளதைப் பார்த்து, அதை இதற்கு முன் பார்த்த பிம்பங்களுடன் ஒப்பு நோக்கியே நம் மூளை அதைத் தீர்மானிக்கிறது.  பல வருடங்களாகக் கண் தெரியாமல் இருந்தவர் (அல்லது காந்தாரி மாதிரி ஒருவர்) இந்த ராட்டினத்தில் ஏறினால் அவரது அனுபவம் எப்படி இருக்கும்?  அவரால் தான் தலைகீழாகச் சுற்றியதை உணர்ந்துகொள்ள முடியுமா?

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

பிறை 'கூட'வா??

பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு
என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு
இந்த இரண்டு வரிகளும் பல வருடங்களுக்கு முன் முதன்முதலில் கேட்டதிலிருந்து இன்று வரையிலும் கேட்கும்போதெல்லாம் உறுத்திக் கொண்டே இருக்கின்றன.  என்னத்தை நினைத்து வைரமுத்து இந்த வரிகளை எழுதினாரோ.  பிறையும் இருளும் எல்லா நேரத்திலுமே அழகுதானே.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

யாமறிந்த மொழிகளிலே

பல தமிழர்கள் இதைச் சொல்லிக் கேட்டிருக்கிறேன் -- "தமிழ் என்பதே ஒரு அருமையான அனுபவம்".  சிறு வயதுகளில் அதற்கெல்லாம் நான் மதிப்பே கொடுத்ததில்லை.  என் ரத்தத்தின் ரத்தமே என்று மேடையில் முழங்கும் அரசியலுக்கும் "தமிழே அமுதே"வுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் அப்போது எனக்குத் தெரியவில்லை.  தமிழ் மட்டுமே தெரிந்திருந்த அந்தக் காலத்தில் ஒப்பு நோக்க வேறெந்த மொழியும் இல்லை என்பதும் ஒரு காரணம்.

இப்போது நிலைமை வேறு.  பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் சிந்திக்கிறேன்.  ஆங்கிலப் பாடல்கள் கூட புரியத் தொடங்கி விட்டது.  ஆங்கிலத்தில் வாசிப்பதும் எழுதுவதும் தமிழை விடப் பலமடங்கு அதிகம்.  இந்த நிலையில் என்னால் ஆங்கிலமும் தமிழும் எனக்கு அளிக்கும் அந்தரங்க அனுபவத்தைப் பற்றி ஓரளவு பேச முடியும்.

ஜெயமோகனின் புல்வெளி தேசம் புத்தகத்தை நேற்று படித்து முடித்து, நேற்றிரவே கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம் நாவலை வாசிக்கத் தொடங்கி விட்டேன்.  தமிழ் வாசிக்கும் போது தோன்றும் அந்த எண்ணம் மீண்டும் இன்று காலையில் தோன்றியது: தமிழ் அந்தரங்கமாக என் மனதில் ஒரு இனிய பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்கிறது.  அது ஒரு அழகியல் அனுபவம்.  அதற்கு என்ன காரணம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.  ஒன்றும் பிடிபடவில்லை.

சிறிது நேரத்துக்குப் பின் தற்செயலாகக் காதில் விழுந்த பாடல் வரியில் ஒரு பதில் இருந்தது.  "பாசி மணி ரெண்டும் கோக்கையிலே பாவி மனசையும் கோத்தவளே."  தமிழில் இது மாதிரியான வரிகள் ஏகப்பட்டவை.  ஆங்கிலப் பாடல்களோடு ஒப்பிட்டால் நம் ஆள்கள் பல மடங்கு அதிகமாக உவமையையும் உருவகத்தையும் படிமங்களையும் பயன்படுத்தியிருப்பார்கள்.  ஜெயமோகன் புல்வெளி தேசத்தில் கூறியிருந்த ஒரு கருத்து "இலக்கியம் என்பது பண்பாட்டைச் சேகரிக்கும் கருவி" என்பது.  தமிழ் இலக்கியத்துக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகால வரலாறு இருக்கிறது.  அந்தப் பின்புலம் தான் இன்றைக்கு நாம் எழுதும் சினிமாப் பாடல்களில் கூட உருவகங்களை நம்மை எதிர்பார்க்க வைக்கிறதோ என்னவோ.

-----
ஆங்கிலத்தில் நான் ரசிக்கும் கவிஞர்களில் ஒருவர் லியனர்ட் கோஹன்.  இந்தக் கவிதையைக் கேட்டால் உங்களுக்குப் புரியும், ஏன் என்று.
கோஹன் ஒரு இசையமைப்பாளரும் கூட.  பல நல்ல பாடல்களும் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

வேதம் புதிது

திடீர் திடீரென்று எனக்குத் தோன்றும், ஏற்கெனவே பார்த்த ஏதாவதொரு படத்தைத் திரும்பவும் பார்க்க வேண்டுமென்று.  பல வருடங்களுக்கு முன் பார்த்த படம் வேதம் புதிது.  இன்றைக்கு மீண்டும் பார்க்கத் தோன்றியது.

முதல் தடவை இந்தப் படத்தைப் பார்த்த பின்புதான் பாரதிராஜா மேல் எனக்கு ஒரு தனி மரியாதை வந்தது.  பிறகு இந்தப் படத்தை முழுவதுமாக மறந்து போய் விட்டேன்.  இன்று ஒவ்வொரு காட்சியையும் பார்க்கப் பார்க்க அதிலிருந்த நேர்த்தியும் அழகும் மீண்டும் ஒரு புதிய அனுபவமாயிருந்தது.

வழக்கமான தமிழ்ப்படங்களைப்போல வளவளவென்றில்லாமல் சொல்ல வேண்டிய விஷயத்தை மட்டும் சொல்லி வேகமாக நகர்ந்த வண்ணமிருக்கிறது படம்.  இயல்பான பாத்திரங்களின் இயல்பாகவும் 'நச்'சென்றும் இருக்கும் வசனங்களை ரொம்ப ரசித்தேன்.  முக்கியமாக வீட்டுக்குப் புதிதாக வந்திருக்கும் பிராமணப் பையனால் பாலுத்தேவரின் வீட்டில் ஏற்படும் மாற்றங்கள்.
- நீங்க கோழியெல்லாம் சாப்பிடுவேளா?
- ஆங், ஆடு கோழி எல்லாத்தையும் திங்கிறது தான்.
- மாமி?
- அவ மட்டும் என்ன வாயைப் பாத்துட்டா இருப்பா, அவளும் திங்கிறதுதான்.
- இதெல்லாம் பாவம் இல்லையா?
- (தனக்குள்) சின்னப் பசங்களைக் கெடுத்துட்டாங்க.
----------
- இதென்ன புதுசா இந்த வீட்டுக்குள்ள மணிச்சத்தம் கேக்குது?
- முன் செஞ்ச வினை, பின் செஞ்ச வினைன்னு சொல்லுவாங்க.  சாமி விடுமா?  நீங்க கோயிலுக்கே போக மாட்டேன்னு வீம்பு பண்ணுவீக.  சாமி கண்ணு திறந்துச்சு, கோயிலு வீட்டுக்குள்ள வந்துருச்சு.
(சற்று நேர மௌனம்)
- சாம்பிராணிப் புகையை இவ்வளவு போட்டு வச்சிருக்கியே, உனக்கு எதாவது பிடிச்சிருக்கா இல்லை வீட்டுக்கு எதாவது பிடிச்சிருக்கா?
- ஆமா... அந்தப் புள்ளையை எங்க இருந்து புடிச்சுட்டு வந்தீக?
- அக்ரகாரத்துல புள்ளை அநாதையா நின்னுச்சு... கூட்டியாந்துட்டேன்.
- அப்ப அந்த வாடைதான் வீசும்.  நம்ம புள்ள சங்கரபாண்டி இருந்து அவன் கைகாலை நீங்க முடக்கிப் போடாம இருந்திருந்தா, இந்தக் கூடத்திலயும் அந்த வாடைதான் வீசும்.
இந்தப் படத்தில் நான் முக்கியமாகப் பார்ப்பது பாலுத்தேவர் எவ்வளவு தூரம் மாற்றங்களுக்குச் சம்மதிக்கிறார் என்பது தான்.  பிடிவாதமான கொள்கைக் காரராக இல்லாமல் காலத்தின் போக்குக்கேற்றாற்போல் மாறும் மனிதர் மேல் எனக்கு எப்போதும் மதிப்புண்டு.

பாலுத்தேவரைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையிலேயே என் அப்பாவைப் பற்றிய ஞாபகம் வந்தது.  முக்கியமாக பாலுத்தேவருக்கும் அப்பாவுக்கும் இருக்கும் ஒற்றுமை.

படித்துக் கொண்டிருந்த நாள்களில் என் நண்பர்களுக்கு என் அப்பாவின் மேல் பெரிய மதிப்புண்டு.  "கண்ணா நீ வெளியே போறியா இன்னைக்கு?  நீ வெளியே போகலைன்னா நான் வண்டி எடுத்துக்குவேன்" என்று என் அப்பா என்னிடம் சொல்வதைக் கேட்டு ஆச்சர்யப் படாதவர்கள் கம்மி.  பொதுவாக அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் இந்த மாதிரி சின்ன விஷயங்களைப் பேசுவது இல்லாமல் இருக்கலாம்.  அல்லது மகன் வெளியே போவது உதவாத விஷயங்களுக்கு மட்டும்தான் என்று பலர் முன்முடிவுடன் இருப்பார்களோ என்னவோ.

என் அண்ணன் சரவணனுக்கு அப்புறம் நான் தீவிரமான விஷயங்கள் பேசுவது என் அப்பாவிடம் தான்.  குழந்தையாய் இருந்த காலத்திலிருந்து எத்தனையோ விஷயங்களை அப்பாவுடன் விவாதித்திருக்கிறேன்.  அது சாத்தியப்பட்டது அப்பா எட்டு வயது பத்து வயது சிறுவனாக நான் பேசிய வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து கவனித்ததால் தான்.

கல்லூரியில் ஒருநாள் வகுப்பிலுள்ள பையன்கள் அனைவரும் தம் பெற்றோருடன் வந்தால் மட்டுமே வகுப்பில் சேர்த்துக் கொள்வோம் என்று கல்லூரி நிர்வாகம் சொல்லிவிட்டது.  தயங்கித் தயங்கித் தான் வீட்டில் சொன்னேன்.  என்ன விஷயம் என்று கேட்டார்கள்... சொன்னேன்.  ரொம்பச் சில்லறையான விஷயமாக இருந்திருக்க வேண்டும், எனக்கு இப்போது சுத்தமாக ஞாபகம் இல்லை.  மற்ற பையன்கள் வீட்டில் திட்டு வாங்கினார்கள்.  பெற்றோருக்குக் கல்லூரி நிர்வாகம் விளைவித்த அசௌகரியத்துக்குப் பையன்கள் பழியேற்றார்கள்.  அந்த நாளிலோ அதற்குப் பின் வந்த நாள்களிலோ ஒரு கணம் கூட என் அப்பா அந்த நாள் குறித்து என்மேல் கோபம் கொள்ளவில்லை.

நான் படித்தேன் நான் உழைத்தேன் என்று இப்போது காரணம் சொல்லிக் கொள்ளலாம்.  உண்மையில் என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னை மதிக்கிறார்களென்றால், அது என் வீட்டில் எல்லோரும் என்னை மதித்ததால்தான்.  நான் சொன்ன வார்த்தைமேல் வீட்டில் எல்லோரும் நம்பிக்கை வைத்ததால் தான்.  இதற்கெல்லாம் கைமாறு என்று எதையுமே செய்ய முடியாது.  "பிள்ளைப் பெத்த நோவை எந்தப் பிள்ளை தீர்த்ததுண்டு" என்ற வரிதான் ஞாபகத்துக்கு வருகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2011

தினம் ஒரு ஆங்கில வார்த்தை: ஊஞ்சல்

இன்றைய வார்த்தை
ஊஞ்சல் = swing
இத்துடன் எனது 30 நாள் சவால் நிறைவு பெறுகிறது.

மேலும் சில வார்த்தைகள்