இடுகைகள்

டிசம்பர், 2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேதனை தர்க்கம் அறியாது

நான் யுனிவர்சிட்டியில் படித்த காலங்களில் என்னைக் கவனித்தவர்களுக்குத் தெரியும் -- நடந்து போகையில் பக்கத்தில் இருக்கும் செடியின் இலைகளை கைகளால் மெல்ல வருடியபடியே செல்வேன்.  அப்படியெல்லாம் செய்தால் செடி நன்றாக வளரும் என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.  இல்லாவிட்டாலும், பாசமான ஒரு தொடுதல் என்பது ஒரு நல்ல அனுபவம்.  செடிக்கு அது நன்றாக இருக்கிறதோ இல்லையோ, நமக்கு நல்லது :) வாரங்கள் கழித்து அசைவு கொடுக்கத் தொடங்கியிருக்கும் மூட்டு சிலநேரங்களில் வேதனை என்றால் என்ன என்று எனக்கு விளக்கமாகப் பாடம் எடுக்கத் தொடங்கி விடுகிறது.  விரல் நுனியால் அதனை மெல்ல, பூப்போல வருடுவது ரொம்பவே ஆறுதல் அளிக்கிறது. அசைய முடியாமல் உடைந்த பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவரும் அந்த மூட்டுக்கு மனதிற்குள் நன்றி சொல்கிறேன் அவ்வப்போது.  பைத்தியக்காரத்தனமாகக் கூட இருக்கலாம்.  ஆனால் இப்போதைக்கு ஆறுதல் அளிக்கிறது.  வலியில் இருப்பவனிடம் தர்க்க நியாயம் பேசமுடியாது என்பது உண்மைதான்.  நூறு ரூபாய்க்கு தனது vote-ஐ விற்பவர்கள் இன்னும் நெடுநாட்களுக்கு இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

அழுதபிள்ளை

பால்குடி மறக்க வைத்த நாள்தான் நினைவுக்கு வந்தது. மிட்டாய் கேட்டு அழுபவனை சமாதானம் செய்ததும். தீபாவளிப் பட்டாசு, நண்பனை மாதிரியே கலர் சட்டை, கல்லூரிக்குப் போக மோட்டார்பைக், செல்போன். பால் பாத்திரத்தை மட்டுமே பார்த்த அழுதபிள்ளை அவன். இவள் மட்டும் கிடைப்பாள் என்று எதற்கு நம்பினான்? என்னை இப்படி நாதியின்றி நிற்க வைக்கத்தானா?

கால்தானே

தன்னையறியாமல் வந்த விசும்பலை மீண்டும் அடக்கினேன். கண்ணீர் வந்துவிடவில்லை. நல்லவேளை, யாரும் கவனிக்கவுமில்லை. பயந்தா போயிருக்கிறேன்? தலையணையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் "கால்தானே போய்விட்டது. அதனாலென்ன?"