ஈஸ்வர அல்லா தேரே நாம்
ஜெயகாந்தனின் ஈஸ்வர அல்லா தேரே நாம் நாவலை இப்போதுதான் படித்து முடித்தேன். மத நல்லிணக்கத்தை மையக்கருவாகக் கொண்ட நாவல் என்றாலும் காந்தியம், காதல், சமூகம் என்று பலவற்றையும் விவாதிக்கும் நாவல். நாவலில் எனக்குப் பிடித்த வரிகள்: மனிதன் சம்பந்தப்பட்ட எல்லாமே மாயைதானே! உயர்நோக்கமுள்ள கல்வியும் ஞானமும் எளிமையான வாழ்வோடு இணைகிறபோது, எத்தகைய இழிநிலையிலிருந்த கடையனும் அந்தணனே ஆகிவிட மாட்டானோ? அருகம்புல்லுக்கு ஆயுள் முடிவு என்பதே இல்லை. காய்ந்து தீய்ந்து மண்ணோடு மக்கிப் போயிருக்கும். சில துளி மழை விழுந்தால் மறுபடியும் பசுமையோடு சிலிர்த்தெழுந்து முளைக்கும்! மெய்யான லட்சியங்கள் அருகம்புல்லைப் போன்றவை. அவை மக்கினாலும் மடிந்து விடுவதில்லை. மனிதர் இல்லாத எந்தப் புனித இடமும் பாழ் அடைந்து விடுவதுதான் இயல்பு. நான் படிச்சவரைக்கும் பைபிள், குரான், ஜென்டவெஸ்தா எல்லாமே வேறு வேறு மத நூல்கள் என்று சொல்லப்பட்டாலும், ஒரு மாபெரும் புத்தகத்தின் பல அத்தியாயங்களைத் தனித்தனியே படிக்கிறதாகவே உணர்ந்தேன். அப்படி உணர்கிறவனை காந்தி மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லலாம். கொள்கைகளாலும் மரபுகளாலும் மதங்கள் அமைந்ததாகச் சொல